மயிலம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
மயிலம்: மயிலம் சுப்ரமணிய சுவாமி கோவில் கிருத்திகை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு முதல் கால வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு பாலசித்தர், வினாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிகளுக்கு பால் சந்தனம் பன்னீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால், அபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம், 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்தனர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.