ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் பிறப்பு, சுவாமிகள் வீதியுலா, உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் நடந்தது.
நேற்று முன் தினம் ஆண்டாள் கோயிலில் இருந்து கிருஷ்ணர், ருக்குமணி, சத்தியபாமா புறப்பட்டு கிருஷ்ணர் கோயிலில் எழுந்தருளினர். அங்கு திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் முடிந்து மீண்டும் கோயில் திரும்பினர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 12:00 மணிக்கு மேல் கிருஷ்ணர் பிறப்பு, சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் நேற்று இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார், பெரிய பெருமாள், கிருஷ்ணர் வீதியுலா வந்தனர். அப்போது உறியடி உற்சவமும், ஆடிப்பூர பந்தலில் வழுக்கு மரம் ஏறுதலும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.