உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க தடை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தகவல்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க தடை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் தர்ப்பணம் கொடுப்பதையோ அல்லது வேறு ஏதேனும் மதச்சடங்குகளை மேற்கொள்வதையோ தடுக்கும் எண்ணம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

ஸ்ரீரங்கம் புரோகிதர்கள் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த பொதுநல மனு:

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதற்கு புகழ்பெற்ற இடம். கோயில் நிர்வாகம் மண்டபத்திற்குள் கற்களை நட்டு வைத்துள்ளது.இதனால் எங்களை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தை கோயில் நிர்வாகம் கையகப்படுத்த வாய்ப்புள்ளதாக சங்க உறுப்பினர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

அம்மா மண்டபத்திற்கு வரும் மக்கள் மற்றும் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய, பாதுகாப்பு வழங்கக்கோரி அறநிலையத்துறை கமிஷனர், கலெக்டர், கோயில் இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆனந்தகுமார் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் இணைக் கமிஷனர் பிறப்பித்த உத்தரவில், அந்நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கற்கள் நடப்பட்டன. புரோகிதர்கள் அங்கு தர்ப்பணம் கொடுப்பதையோ அல்லது வேறு ஏதேனும் மதச் சடங்குகளை மேற்கொள்வதையோ தடுக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.

எதிர்காலத்தில் அந்த இடம் தேவைப்பட்டால், சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்’ என தெரிவித்துள்ளார்.

இத்துடன் வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !