வற்றாத நீரூற்றை உருவாக்கிய ஸ்ரீராமர்
தாவணகெரே மாவட்டம், ஹொன்னாலி தாலுகாவில் பேலகுத்தி கிராமத்தில் உள்ள ‘தீர்த்த ராமேஸ்வரர் கோவில்’ பசுமை மற்றும் சிறு குன்றுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் அமைதியான, வனம் போன்ற சூழலை கொண்டிருப்பதால், ஆன்மிக தலமாக விளங்குகிறது.
இக்கோவில் 12 முதல் 15ம் நுாற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. உள்ளூர் பக்தர்களுக்கு சிறந்த ஆன்மிக மையமாகவும் திகழ்கிறது.இக்கோவிலின் ஸ்தலபுராணம், உள்ளூர் பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்டது. புராணங்கள்படி வனவாசத்தின் போது ஸ்ரீராமரும், சீதையும் இவ்வழியாக சென்றனர்.
வனப்பகுதி வழியாக பயணம் செய்த போது, சீதைக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. அவருக்கு உதவ, ஸ்ரீராமர், தரையில் ஓர் அம்பை எய்தார். அந்த இடத்தில் ஓர் இயற்கை நீரூற்று உருவானது.
இந்த புனித நீர், அன்று முதல் தொடர்ந்து ஓடி கொண்டிருக்கிறது; இதுவரை வற்றியதில்லை. இந்த நீர் துாய்மையாகவும், தோல் நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது. நீரை பல நாட்கள் சேமித்து வைத்தாலும் நன்றாகவே இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த நீரின் தெய்வீக தன்மை காரணமாக, புனித நீருடன் தொடர்புடைய இறைவன் என்று பொருள்படும் வகையில் தீர்த்த ராமேஸ்வரராக சிவபெருமான் வழிபடப்படுகிறார். இந்த புனித நீரை, ‘காசி கங்கா குளம்’ என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் உள்ளடக்கிய திருமூர்த்திகள், இங்கு அருள்பாலிப்பது இக்கோவிலின் ஓர் அரிய மற்றும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
விமானத்தில் செல்வோர், ஷிவமொக்கா விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சியில் 45 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு செல்லலாம்.
ரயிலில் செல்வோர், ஷிவமொக்கா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 37 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
பஸ்சில் செல்வோர், ஹொன்னாலி பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
கோவில் திறப்பு: காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை
திருவிழா: மஹா சிவராத்திரி, கார்த்திகை தீப உற்சவம், ஆண்டு விழா