தங்க அம்பாரியை சுமப்பது யார்? யானைகளுக்கு துவங்கியது பயிற்சி
மைசூரு: மைசூரு தசராவில் தங்க அம்பாரியை சுமக்கும் யானையை தேர்வு செய்யும் பணியில், முதல்கட்டமாக ‘மஹேந்திரா’ யானைக்கு 250 கிலோ மணல் மூட்டையுடன் ஒத்திகை துவங்கியது.
மைசூரு தசராவில் பங்கேற்பதற்காக, முதல் கட்டமாக ஒன்பது யானைகள் வந்துள்ளன. அபிமன்யு யானை 60 வயதை கடந்ததால், ஓய்வு அளிக்கப்பட்டு விட்டது. இதனால் ஜம்பு சவாரியன்று 750 கிலோ எடை உள்ள தங்க அம்பாரியை சுமக்க, மஹேந்திரா, தனஞ்செயா, புஷ்பலதா ஆகிய மூன்று யானைகளை தேர்வு செய்துள்ளனர்.
இந்த யானைகளில், முதல் கட்டமாக மஹேந்திரா யானைக்கு மொத்தம் 500 கிலோ எடை கொண்ட ஆறு மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சி நேற்று முன்தினம் துவங்கியது. அரண்மனை வளாகத்தில் யானையின் முதுகில் மணல் மூட்டைகள் ஏற்றப்பட்டன.
அரண்மனையில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்ட மஹேந்திரா உட்பட ஒன்பது யானைகள், 4.8 கி.மீ., தொலைவில் உள்ள பன்னி மண்டபம் வரை சென்று, மீண்டும் இரவு 8:45 மணிக்கு அரண்மனை வந்தன.
வழிநெடுகிலும் சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்கள் யானைகளை படம் பிடித்தனர். ஒரே நேரத்தில் ஒன்பது யானைகளை பார்த்த சிறுவர்கள் உற்சாகமடைந்தனர்.
‘முதல் ஐந்து நாட்கள் மஹேந்திராவும், அடுத்த ஐந்து ஐந்து நாட்கள் முறையே தனஞ்செயா, புஷ்பலதா யானைகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும்’ என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.