ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திறந்த வெளியில் நிற்கும் அவலம்
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளதால் மழையிலும், வெயிலிலும் காய்ந்து வீணாகி வருகிறது.
ரிஷிவந்தியத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாதம் இக்கோவில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கோவில் திருப்பணி நடந்ததால் தேர் திருவிழா நடத்தப்படவில்லை. தேர் வலுவிழந்த நிலையில் இருப்பதால் நடப்பாண்டும் திருவிழா நடத்த முடியாது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர் திருவிழா நடத்த அதிகாரிகள் சம்மதித்தனர். இதையடுத்து, தகரத்திலான ‘ஷீட்’டுகள் மூலம் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கூரை அகற்றப்பட்டு, தேர் வெளியே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, தேர் சீரமைக்கப்பட்டு கடந்த ஜூலை 25ம் தேதி திருவிழாவும் நடத்தப்பட்டது. திருவிழா முடிந்து 40 நாட்களுக்கு மேலாகும் நிலையில், தேரைச் சுற்றி மீண்டும் கூரை அமைக்காமல் உள்ளனர். இதனால், வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்து வீணாகி வருகிறது. ஏற்கனவே தேர் வலுவிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறும் நிலையில் பத்திரமாக பாதுகாக்காமல் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேருக்கு பாதுகாப்பாக கூரை அமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.