ஓரிக்கையில் காஞ்சி சுவாமிகளிடம் வேத மாணவர்கள் ஆசி
மதுரை: காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துவரும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீர்காழி பாடசாலை மாணவர்கள் ஆசி பெற்றனர்.
சீர்காழியில் பிறந்தவர் ஸ்ரீ ஞானசம்பந்தர். அவர் பிறந்த இல்லம் காஞ்சி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் 1996ல் புனரமைக்கப்பட்டது. வேத நெறி தழைத்து ஓங்கவும், சைவத்துறை விளங்கிடவும், வேதம், சிவாகமம், ஸமஸ்கிருதம், திருமுறை போன்றவை பயிற்றுவிக்க அந்த இல்லத்தில் 1999 முதல் பாடசாலை துவங்கி நடந்து வருகிறது. சிறந்த ஆசிரியர்களை கொண்டு திருக்கோயில் சார்ந்த பாடங்கள் ஆறு ஆண்டுகளுக்கு நடத்தப்படுகிறது. தேர்வுபெறும் ஆதிசைவ சிவாச்சார்ய மரபில் வந்த மாணவர்களுக்கு காஞ்சிபுரம் அருகே ஏனாத்துாரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலை மூலம் ‘சிவாகம சூடாமணி’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. சீர்காழி பாடசாலையில் பயிலும் 45 மாணவர்கள், தலைமை ஆசிரியர் திருவிடை மருதுார் சாம்பசிவ சிவாச்சாரியார், வேத ஆசிரியர்கள் மயிலாடுதுறை மகாலிங்க ஸ்ரவுதிகள், முழையூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், பில்லுார் ஆனந்த் சிவம், சமஸ்கிருத ஆசிரியர் ஹரிஹர சிவாச்சாரியார், பாடசாலை மேலாளர் ராஜகோபால ஐயர், உள்ளிட்டோர் காஞ்சியை அடுத்த ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வரும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீஸத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசனம் செய்தனர். பின்னர் பூஜை, பிக்ஷாவந்தனம் செய்தனர். ஆறு ஆண்டு பயிற்சி முடித்து தேர்வில் வெற்றி பெற்ற, 10 மாணவர்களுக்கு மஹாசுவாமிகள் சதாப்தி மணிமண்டபத்தில் சங்கராச்சார்ய சுவாமிகள் திருக்கரங்களால் சான்றிதழ் அளித்து ஆசீர் வதித்தார்.