உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் 3 நாட்கள் நடந்த பவித்ரோத்ஸவம்

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் 3 நாட்கள் நடந்த பவித்ரோத்ஸவம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் மூன்று நாட்கள் பவித்ரோத்ஸவம் கொண்டாடப்பட்டது.

பவித்ரோத்ஸவம் என்பது வைணவ கோயில்களில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஒரு புனிதமான பரிகாரம் மற்றும் துாய்மைப்படுத்தும் விழா.

பவித்திரம் என்றால் துாய்மையானது அல்லது புனிதமானது என்றும், உற்ஸவம் என்றால் விழா என்றும் பொருள்படும். ஆண்டு முழுவதும் கோயிலில் தினசரி பூஜைகள் ஆராதனைகள் மற்றும் பிற உற்ஸவங்கள் நடக்கும் போது அறியாமலோ அல்லது தவிர்க்க முடியாத காரணங்களாலோ ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்.

அந்த தோஷங்களை நீக்கி கோயில் மற்றும் மூலவரின் தெய்வீக ஆற்றலை மீண்டும் புதுப்பித்து துாய்மைப்படுத்துவது இந்த உற்ஸவத்தின் முதன்மை நோக்கம்.

செப்., 7 முதல் நேற்று வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மூன்று கால ஹோம வேள்வி பூஜைகள் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் நடந்தது.

ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை ஹோம வேள்வியில் பூர்ணாஹுதி நடந்தது.

நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை வேதபாராயண கோஷ்டியினர் பாட நான்கு ரத வீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பட்டு அல்லது பருத்தி நுால்களால் பல வண்ணங்களில் சிறப்பு மந்திரங்களை உச்சரித்து செய்யப்பட்ட பவித்திர நுால் மாலைகள் தயார் செய்யப்பட்டு மூலவர் மற்றும் உற்ஸவர்களுக்கு பட்டாச்சாரியார்களால் சாற்றப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !