விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திருவலஞ்சுழி கோவிலில் தேரோட்டம்
தஞ்சாவூர், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே திருவலச்சுழியில் கபர்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அப்பர் மற்றும் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிறப்பு மிக்க தலமாகும். இவ்வாலயத்தில், விநாயகருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. விநாயகர் சன்னதி அமைந்துள்ள பகுதி முழுவதும் கருங்கற்களால் செய்யப்பட்ட நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன், புராதன கட்டடக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. தொன்மையும், ஆன்மிகப் பெருமையும் கொண்ட இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று வாணி- கமலாம்பிகா சமேத விநாயகர் தேரில் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.