விநாயகர் கோயிலில்களில் தேரோட்டம் விமரிசை
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடக்கிறது. செப்.5 ல், கொடியேற்றத்துடன் விழா துவங்கிய நிலையில், தினமும் மாலையில் பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வுகளாக, வெள்ளி மூஷிகம், கேடயம், சிம்மம், மயில், ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. விழாவில் எட்டாம் நாளான நேற்று முன்தினம் விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. முதல் தொடர்ச்சியாக நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். முன்னதாக மூலவருக்கு சிறப்பு தீப ஆராதனை செய்யப்பட்டது. விழாவின் கடைசி நாளான இன்று செப்.14 ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் இக்கோயில் விழா நிறைவடைகிறது. இதனால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், செப்., 15ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. தினமும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்திலும், இரவில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடந்தது.
விழாவின் 9ம் நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். நேற்று மாலை 4:55 மணிக்கு பிச்சை, சோமசுந்தரர், ஸ்ரீதர் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். பரம்பரை அறங்காவலர்கள் கோனாப்பட்டு பி.எல்.ஏ.ஆர்., ராமசாமி, அரிமளம் எஸ்.என்., கண்ணன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது. சண்டிகேஸ்வரர் தேர் வடத்தை பெண்கள் மட்டுமே இழுத்தனர். நேற்று இரவு 10:30 மணி வரை சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார். இரவு யானை வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா வந்தார். விழாவின் 10ம் நாளான இன்று காலை, 9:00 மணிக்கு மேல் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில் தெப்பக்குளத்தில் அங்குசதேவருக்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடை பெறும்.
மதியம் மூலவருக்கு முக்குறுணி மோதகம் படையல், இரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறும்.
விருத்தாசலம்: ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவில்
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும், ஆற்றங்கரை சித்தி விநாயகர்கோவிலில், சதுர்த்தி பெருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, தினசரி காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவு 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை 8:00 மணியளவில் தேரோட்டம் நடந்தது. திருத்தேரில் சித்தி விநாயகர் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 14ம் தேதி சதுர்த்தியையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.