உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்: திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் 61 அடி உயரமுள்ள மிக பிரம்மாண்டமான அழகிய வடிவமைப்புடன் கூடிய முருகன் சிலை வடிவமைக்கப்பட்ட, சிவசுப்பிரமணியன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, விநாயகர், மாரியம்மன், ஐயப்பன் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 61 அடி உயரமுள்ள முருகன் சுவாமி சிலைக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரம் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் மூல கலசங்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அன்னூர்: தாத்தம்பாளையம்


தாத்தம்பாளையத்தில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலில், புதிதாக கர்ப்ப கிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகியவை கருங்கல் வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டன. இத்துடன் விமான கோபுரம், பாலகணபதி, பாலமுருகன் சன்னதிகள் சுற்றுப் பிரகாரத்தில் அமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, திருப்பணி முடிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த, 11ம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால வேள்வி பூஜையும், மதியம் விமான கோபுர கலசங்கள் பிரதிஷ்டையும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடந்தது. நேற்று காலை 7:50 மணிக்கு அம்மன் விமான கோபுரத்திற்கும், இதையடுத்து அம்மன் மற்றும் விநாயகர் கோவிலுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து தசதானம், தச தரிசனம், அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

அச்சிறுபாக்கம்

அச்சிறுபாக்கத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பழமையான மூங்கிலம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. மூங்கிலம்மன் கோவிலை புனரமைத்து, மாரியம்மன் கோவிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் கடந்தாண்டு திருப்பணி மேற்கொண்டனர். திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள், கடந்த 10ம் தேதி தொடங்கின. அதை தொடர்ந்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜைகள் நடந்தன. நேற்று காலை காலை 9:15 மணிக்கு பூஜிக்கப்பட்ட புனித நீரால் மூங்கிலம்மன் கோபுர கலசத்திற்கும், 09:30 மணிக்கு மாரியம்மன் கோவில் கோபுர விமானத்திற்கும், 10:00 மணிக்கு மூலவருக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் பங்கேற்று, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினார். பின், மாரியம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. அச்சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள், சுவாமியை வழிபட்டனர். விழாவிற்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.  

கோவை: கோவைப்புதுார் குளத்துப்பாளையம்

கோவைப்புதுார் குளத்துப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று காலை 6:30க்கு நான்காம் கால யாக பூஜையும், 8 மணிக்கு கலசங்கள் ஆலயம் வலம் வருதலும் நடந்தன. காலை 8:15 மணிக்கு ஸ்ரீ மஹாலட்சுமி அம்மன் விமானம், மூலஸ்தானத்தில் கும்பாபிஷேகமும், 9 மணிக்கு மஹா அன்னதானமும் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், சேஷாத்திரிபாளையம் சப்த கன்னியம்மன் கோவில் மற்றும் உத்திரமேரூர், சிறுமையிலுார் கற்பக விநாயகர் கோவில்களில் நேற்று, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சின்ன காஞ்சிபுரம், சேஷாத்திரிபாளையம் சப்த கன்னியம்மன் கோவிலில், கடந்த 11ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

உத்திரமேரூர் ஒன்றியம், சிறுமையிலுார் கிராமத்தில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபி ஷேகத்தை ஒட்டி, கடந்த 12ம் தேதி கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் விழா தொடங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்


ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 11ம் தேதி அனுக்ஞை, விக்னே ஸ்வர பூஜை,கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து நித்ய புஷ்கரணி குளத்தில் இருந்து யானை, குதிரை, பசு, பாலிகை சூழ புனித நீர் கொண்டுவரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 12ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, திரவியாகுதி, பூர்ணாகுதி, மூன்றா ம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, கோ பூஜை, பரிசாகுதி நடந்து காலை 10 மணிக்கு கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் அபிஷேகம் செய்து பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் தர்மகர்த்தா ராசாக்கண்ணு, நாட்டார்கள் தனபால், சேட்டு, ராசாங்கம், மாரியப்பன், விழாக்குழு தலைவர் கோதண்டபாணி,முன்னாள் வார்டு கவுன்சிலர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ரவிசுந்தர் சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !