மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தில் பக்தர்களுக்கு மெகா விருந்து
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை வடக்கு மாசிவீதியில் உள்ள சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை டிரஸ்ட் சார்பில் இன்று காலை 7:00 மணி முதல் இடைவெளி இல்லாமல் மதியம் வரை விருந்து அளிக்கப்படுகிறது. இதில் இனிப்பு, வெண் பொங்கல், வெஜிடபிள், தக்காளி, தயிர்சாதம், உருளைக்கிழங்கு, காரக்கறி, வடை வழங்கப்பட உள்ளது. தவிர பல்வேறு அமைப்புகள் ஆங்காங்கே அன்னதானம் வழங்க உள்ளன.
17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்ட மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரெங்கும் இரவிலும் வண்ணமயமாய் அலங்கார விளக்குகள் ஒளிவீசுகின்றன. எங்கிருந்தும் கோயில் கோபுரங்களை காணும் வகையில் லேசர் ஒளிக்கதிர்கள் வீசிக்கொண்டிருக்கின்றன. தங்கள் வீட்டு விழாவாக எண்ணி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.