சிறுமுகையில் விநாயகர் சதுர்த்தி விழா
மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் விவேகானந்தர் ஹிந்து பேரவை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
சிறுமுகையில் உள்ள விவேகானந்தர் ஹிந்து பேரவையினர், பொது மக்களுடன் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். தியேட்டர் மேடு பகுதியில் பத்தடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்தனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
இது குறித்து விவேகானந்தர் ஹிந்து பேரவை மாவட்ட தலைவர் முத்துசாமி கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவை, இந்த ஆண்டு மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டது. சிறுமுகை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாளை (இன்று) விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. 15ம் தேதி விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், மாலை, 5:00 மணிக்கு விசர்ஜன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. கல்லாறு அகத்தியர் ஞானபீடம் சரோஜினி மாதாஜி ஆசையுறை வழங்குகிறார். ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ரவிக்குமார் சிறப்புரை ஆற்ற உள்ளார். சிறுமுகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, பழத்தோட்டம் அருகே பவானி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை பேரவை நிர்வாகிகள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.