உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தியில் கரைந்த பொதுஜனம்; மனம் நிறைத்த விசர்ஜனம் பக்தர்கள் சிந்தனையில் விதைத்த ஆன்மிக தத்துவம்

பக்தியில் கரைந்த பொதுஜனம்; மனம் நிறைத்த விசர்ஜனம் பக்தர்கள் சிந்தனையில் விதைத்த ஆன்மிக தத்துவம்

விக்கிரவாண்டி

வீடூர் அணையில் விநாயகர் சிலைகளை பக்தர்கள் விஜர்சனம் செய்தனர்.

விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, 93 சிலைகளும் பெரியதச்சூர் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில், 70 சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

மூன்றாவது நாளான நேற்று விக்கிரவாண்டி பகுதிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வீடூர் அணையில் விஜர்சனம் செய்தனர்.

அது போன்று பெரியதச்சூர் பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளில் 10 சிலைகள் மட்டும் வீடுர் அணையிலும் இதர சிலைகளை உள்ளூர் நீர்நிலை மற்றும் பாண்டி கடற்கரையிலும் தண்ணீரில் கரைத்து விஜர்சனம் செய்தனர்.

விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணகுமார் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்


விநாயகர் சதுர்த்தி முடிவடைந்து, விழுப்புரத்தில் நேற்று கடலுார் கடலில் கரைக்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வாகனங்களில் புறப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடந்த 14ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில், 3 அடி முதல் 12 அடி வரை மொத்தம் 1,875 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்நிலையில் விழுப்புரத்தில், இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உட்பட பல அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், 3வது நாளான நேற்று கடலுார் தேவனாம்பட்டினம் கடலில் கரைப்பதற்காக டிப்பர் டிராக்டர் மற்றும் லாரி, சரக்கு வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகிலிருந்து மாலை 3:00 மணிக்கு விநாயகர் சிலைகள் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் கோவில்கள், பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

இந்த ஊர்வலம் விழுப்புரம் பழைய பஸ் நிலையம், எம்.ஜி., ரோடு, காமராஜர் வீதி, மேல்தெரு, வடக்கு தெரு, திரு.வி.க., வீதி வழியாக காந்தி சிலையை வந்தடைந்து, நேருஜி சாலை, கிழக்கு பாண்டி ரோடு வழியாக கடலுார் சென்றது. இந்த ஊர்வலத்தை யொட்டி, எஸ்.பி., மதிவாணன் மேற்பார்வையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் முக்கிய இடங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

திண்டிவனம்


திண்டிவனத்தில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திண்டிவனத்தில், 36ம் ஆண்டு விநாயகர் விஜர்சன ஊர்வலம் நேற்று மதியம் 1:30 மணியளவில் துவங்கியது. செஞ்சி ரோட்டிலுள்ள அங்காளம்மன் கோவில் அருகிலிருந்து துவங்கிய விநாயகர் சிலை ஊர்வலத்தை தொழில் அதிபர் சுப்பராயலு தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். செஞ்சி கோபிநாத் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி நிர்வாகி ராஜேஸ்வரன் சிறப்புரையாற்றினார். துவக்க விழாவில் பா.ஜ.,பிரமுகர்கள் தினேஷ்குமார், பிரபு, பாலசுப்பரமணியன், ஏழுமலை, ராதிகா, பா.ம.க.,நிர்வாகிகள் ஜெயராஜ், சவுந்தர், விஜயகுமார் மற்றும் துரைசோழன், ராஜா, ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற விநாயகர் ஊர்வலத்தில் டி.எஸ்.பி.,ராதாகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊர்வலத்தில் ஹிந்து முன்னனி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 50க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக மரக்காணம் கைப்பாணிக்குப்பம் கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

விருதுநகர்

விருதுநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பாக ஊர்வலம் நடந்தது.

நேற்று மாலை 6:00 மணிக்கு ஹிந்து முன்னணி சார்பாக பாண்டியன் நகர், தம்மநாயக்கன்பட்டி, காந்திபுரம் தெரு, வாடியான் தெரு, ஆமத்துார், சூலக்கரை உள்பட பல பகுதிகளில் அமைக்கப்பட்ட 41 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

இந்த ஊர்வலம் தேசபந்து மைதானத்தில் துவங்கி மெயின் பஜார் வழியாக தெற்கு ரத வீதி, மேலரத வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் கடந்து புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள கல் கிடங்கில் கரைக்கப்பட்டது.ஊர்வலத்திற்கு எஸ்.பி., கவுதம் கோயல் தலைமையில் டி.எஸ்.பி., யோகேஷ் குமார், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உள்பட 140 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* சாத்துாரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாத்துார், படந்தால், நத்தத்து பட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட சுற்று கிராமங்களில் 12 இடங்களில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு முக்கிய சந்திப்புகளில் விநாயகர் சிலை வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.

நேற்று மாலை 4:30 மணிக்கு அனைத்து விநாயகர் சிலைகளும் முக்குராந்தல் கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து லோடு ஆட்டோக்களில் விநாயகர் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.

பின்னர் கீழச்செல்லையாபுரம் கல் குவாரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிலைகள் தண்ணீரில் கரைக்கப்பட்டன. ஹிந்து முன்னணி , விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சாத்துார் டி.எஸ்.பி. குரு சாமி தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

* ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து முன்னணி சார்பில் 23 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ராமகிருஷ்ணாபுரம் ஆனந்த விநாயகர் கோயில் முன்பிருந்து ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை முருகானந்த சரஸ்வதி சுவாமிகள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, திருவண்ணாமலை குளத்தில் சிலைகள் கரைக்கபட்டது. ஏ.டி.எஸ்.பி.ரமேஷ், டி.எஸ்.பி.ராமச்சந்திரன் தலைமையில் 400 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னுார், சூலுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று விசர்ஜனம் செய்யப்பட்டன.

மேட்டுப்பாளையத்தில், ஹிந்து முன்னணி சார்பில், 63 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று மாலை, விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம், சி.டி.சி., டெப்போ அருகே இருந்து புறப்பட்டது. கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.

வடக்கு மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் வரவேற்றார். ஊர்வலத்தை, மாதையன், விநாயக மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அபிராமி தியேட்டர் அருகே பொதுக்கூட்டம் நடந்தது.

பின், விசர்ஜன ஊர்வலம், காரமடை சாலை, ஊட்டி சாலை வழியாக சுப்பிரமணியர் சுவாமி கோவில் அருகே அடைந்து, பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. பாலக்காட்டைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், செண்டை மேளம் அடித்து ஊர்வலத்தின் முன் சென்றனர். விநாயகர், சிவன், அம்மன், முருகன், காளி ஆகிய தெய்வங்களின் வேடமணிந்தவர்கள், ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

* துடியலுார், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, சரவணம்பட்டி உட்பட பகுதிகளில், 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், ஹிந்து முன்னணி பா.ஜ., அகில பாரத ஹிந்து மகா சபா, ஹிந்து மக்கள் கட்சி, பாரத் சேனா, சிவசேனா, அனுமன் சேனா உட்பட ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று காலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, வெள்ளக்கிணறு குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

வெள்ளக்கிணறு குளத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகம், 20 அடி ஆழத்தில் குழி வெட்டி, அதில், பாலிதீன் சீட் பரப்பி நீர் நிரப்பி, சிலைகள் விசர்ஜனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். சிலைகளை விசர்ஜனம் செய்ய, தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

* ஹிந்து முன்னணி சார்பில், அன்னுார் ஒன்றியத்தில், கரியா கவுண்டனுார், பசூர், மூக்கனுார், கரியாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில், 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று நாட்களாக சிறப்பு வழிபாடு நடந்தது.

நேற்று மாலை, அன்னுார் ஓதிமலை பாதையில் விசர்ஜன விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் பேசுகையில், ‘‘தமிழர் பண்பாடும், இந்து சனாதன தர்மமும் ஒன்றே. நம் பண்பாட்டையும் இந்து தர்மத்தையும் காக்க, ஹிந்து முன்னணி போராடி வருகிறது,’’ என்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மாணிக்கம், மணிரத்தினம், மன்னீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் ஆகியோர் பேசினர். விசர்ஜன ஊர்வலத்தை, மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் சசிகுமார் துவக்கி வைத்தார். ஓதிமலைப் பாதையில் புறப்பட்டு, தர்மர் கோவில் வீதி வழியாக சென்றது.

பக்தர்கள் வழிபாடு

* சோமனுார் சுற்றுவட்டார பகுதிகளில், ஹிந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 70க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்தன. சோமனுார் கிருஷ்ணாபுரத்தில் நடந்த விசர்ஜன விழா பொதுக்கூட்டத்தில், இந்து இளைஞர் முன்னணி நிர்வாகி சண்முகம் பேசினார்.

மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் ராஜ்குமார், பா.ஜ., மாவட்ட நிர்வாகி முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விசர்ஜன ஊர்வலம் துவங்கி, கருமத்தம்பட்டி, சோமனுார் வழியாக சென்று சாமளாபுரம் குளத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

* சூலுார், கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில், 177 இடங்களில் இந்து முன்னணி, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, வீர இந்து சேவா மற்றும் பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான கலாச்சார போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

சூலுார் பெருமாள் கோவில் திடலில், இந்து முன்னணி சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாவட்ட தலைவர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நேற்று காலை முதல், கிராமப் புறங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வீதிகளில் ஊர்வலமாக வந்தன. வெற்றிலை பாக்குடன் தேங்காய் பழம் படைத்து, வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர்.


உடுமலை

உடுமலையில் ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா விசர்ஜன ஊர்வலம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உடுமலை பகுதிகளில் ஹிந்து முன்னணி சார்பில், 188 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது.

முன்னதாக, நேதாஜி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஜோதீஸ்வரி முன்னிலை வகித்தனர்.

பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, விசர்ஜன ஊர்வலம், குட்டை வீதி, பெரியகடை வீதி, பழநி ரோடு வழியாக சென்று, அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

* விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உடுமலை நகர பகுதிகளில், ஹிந்து சாம்ராஜ்யம் சார்பில், பல்வேறு பகுதிகளில், 28 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம், குட்டைத்திடலில் நடந்தது. ஹிந்து சாம்ராஜ்யம் நிறுவனர் சக்திவேல், நிர்வாகிகள் செந்தில், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலையில், 145 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பொள்ளாச்சி, வால்பாறை கோட்டத்தில், 530 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

சிலைகள் நேற்று முன்தினம் முதல் ஊர்வலமாக கொண்டு சென்று விசர்ஜனம் செய்யப்படுகின்றன. நேற்று பொதுமக்கள், பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 114 சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் கரைக்கப்பட்டன. ஆனைமலையில் ஹிந்து அமைப்புகள் சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட 31 சிலைகள், ஆழியாறு ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

கிணத்துக்கடவில் ஹிந்து அமைப்பு சார்பில், - 31 சிலைகள், பொது மக்கள் சார்பில், 9 என, 40 சிலைகள், ஊர்வலமாக கொண்டு சென்று ஆற்றில் கரைக்கப்பட்டன. இதே போன்று நெகமம் சுற்றுப்பகுதியில், ஹிந்து அமைப்பு சார்பில் 20, மக்கள் சார்பில் 11, என, மொத்தம் 31 சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்பட்டன.

மாண்டியா:

கடந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்ட மாண்டியாவின் மத்துார் பகுதியில், பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைமையில் பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் நேற்று நடந்தது.

மாண்டியா மாவட்டம், மத்துாரில் உள்ள ஜாமியா மசூதிக்கு முன், கடந்த ஆண்டு விநாயகர் ஊர்வலம் சென்ற போது, மசூதியில் இருந்து சிலர், விநாயகர் சிலை மீது கல்வீசினர். இச்சம்பவம் வன்முறையாக வெடித்தது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை கண்டித்து, மத்துார் ஜாமியா மசூதிக்கு முன் நேற்று பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைமையில் நடத்தப்பட்டது. இதில், எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., -– எம்.எல்.சி., – சி.டி.ரவி, ஹிந்து அமைப்பினர், பக்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க, பாதுகாப்பு பணியில் கர்நாடக மாநில ரிசர்வ் போலீசார், மத்திய ரிசர்வ் போலீசார் என 600க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர். 30 கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

ஊர்வலம் மசூதிக்கு முன் வந்த போது சிலர் பட்டாசுகளை வெடித்தனர். கோஷங்கள் எழுப்பினர். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த சிலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாண்டியா மாவட்ட எஸ்.பி., ஷோபாராணி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேசி சமாதானம் செய்தார். பின், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது பதற்றம் உருவானது. பின், விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !