உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி மூன்று தேங்காய் வைத்து வழிபாடு

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டி மூன்று தேங்காய் வைத்து வழிபாடு

திருப்பூர்: சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவுப்பெட்டியில், மூன்று தேங்காய் வைத்து பூஜை செய்யப்படுகிறது.


திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலையில் உள்ள ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பக்தர்களின் கனவில் தோன்றும் முருகப்பெருமான் குறிப்பிடும் பொருளை, இந்த பெட்டியில் வைத்து வழிபடுவது வழக்கம். அவ்வகையில், ஏப். 29ம் தேதி முதல், சிறிய அளவிலான ஏர் கலப்பை, மண் கலசத்தில் தீர்த்தம் மற்றும் மண் கலசத்தில் மண் ஆகிய மூன்று பொருட்கள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், பக்தர் ஒருவர் கனவில், மூன்று தேங்காய் வைக்க நேற்று உத்தரவானது. குறிப்பிட்ட பக்தர் கோவிலுக்கு தெரியப்படுத்தினார். சுவாமியிடம் உத்தரவு பெறப்பட்டு, நேற்று முதல், ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மட்டை உரித்த மூன்று தேங்காய் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.


இதுகுறித்து கூனம்பட்டி திருமடம் ஸ்ரீகுருகுல வேதபாடசாலை முதல்வர் ஸ்ரீ நடராஜ சுவாமிகள் கூறியதாவது: இன்றைக்கு அரசியல், ஆன்மிகம், குடும்பங்களில் குழப்பங்களும், குறைபாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. எல்லா வினைகளும், குறைகளும் களைய வேண்டும் என்பதற்காக, விநாயகப்பெருமானிடம் தேங்காய் உடைத்து வழிபடுகிறோம். தேங்காய் என்பது மங்கலகரமான பொருள். முக்கண்களை உடைய தேங்காயை, சிவபெருமானின் அம்சம் என்று சொல்வர். தேங்காய் வைத்து பூஜிப்பதால், மக்களுக்கு எல்லாவிதமான வெற்றிகளும் கிடைக்கும். எல்லோரும் சுபிக் ஷமாக வாழ்வார்கள் என்பதை நமக்கு தெரிவிப்பதற்காகவே இந்த உத்தரவுப்பொருள் கிடைத்திருக்கிறது. சிவபெருமான் மற்றும் விநாயகப்பெருமானின் திருவருளால் அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !