வீணாகும் உடுமலை மாரியம்மன் கோவில் பழைய தேர்
உடுமலை: உடுமலை நகராட்சி பழைய அலுவலக கட்டடம் நுாற்றாண்டு பழமையானதாகும். இந்த கட்டடத்தை பாதுகாக்கும் வகையிலும், உடுமலை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பழங்கால பொருட்கள், வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
அதோடு, வளாகத்தின் முன் பகுதியில், செம்மொழி பூங்கா மற்றும் மாரியம்மன் கோவில் பழைய தேர் காட்சிக்கு வைக்கப்படும் என, நகராட்சியில் மூன்று ஆண்டுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது பழைய அலுவலக கட்டடமான தாகூர் மாளிகையில், மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருவதோடு, விடுதலைப்போராட்ட வீரர் தளி எத்தலப்பர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டம் இழுபறியாகி வருகிறது. இந்நிலையில், உடுமலை தேரோடும் வீதிகளில், பல நுாறு ஆண்டுகளாக, அம்மன் பவனி வந்த ,பழைய மரத்தேர், கடந்த மாதம் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு மாதமாகியும், பழைய தேரை, மீண்டும் சக்கரங்கள் பொருத்தி, தேர் அடுக்கு, கலசம் என முழுமையானதாக மாற்றி, கண்ணாடி கூண்டு அமைத்து, காட்சிப்படுத்தும் பணி மேற்கொள்ளவில்லை. பழைய தேர், திறந்த வெளியில், வெயிலில் காய்ந்தும், மழையில் நனைத்தும், பொலிவிழந்து வருகிறது.