உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாவட்டம் தோறும் விமர்சையாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் விசர்ஜனம் திரளாக பொதுமக்கள் பங்கேற்பு

மாவட்டம் தோறும் விமர்சையாக நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் விசர்ஜனம் திரளாக பொதுமக்கள் பங்கேற்பு

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி நடந்த நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு இந்து முன்னணி சார்பாக, பாலையம்பட்டி, இ.பி., காலனி, ராஜீவ் நகர், மணிநகரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மதுரை ரோடு, அண்ணாதுரை சிலை, மெயின் பஜார், பந்தல்குடி ரோடு வழியாக சென்று பெரிய கண்மாயில் கரைக்கப்பட்டது.

ஊர்வலத்திற்கு மாவட்ட எஸ்.பி., கவுதம் கோயல் தலைமையில், டி.எஸ்.பி., விக்னேஷ் மற்றும் 422 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பரமக்குடி

பரமக்குடியில் ஹிந்து முன்னணி சார்பில் 33ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.

மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர்கள் கங்காதரன், ரத்தின சபாபதி, செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக தலைவர் ஆடல் அரசன் ஜி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மத்திய அரசு வக்கீல் சுந்தர வடிவேல், அனைத்து கோயில் டிரஸ்டிகள் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு ஹிந்து முன்னணி நிறுவனர் மறைந்த ராமகோபாலன் நுாற்றாண்டு விழா, ‘தமிழர் பண்பாடும், சனாதன ஹிந்து மதமும் ஒன்றே’ என்ற கோஷத்துடன் நடந்தது.

67 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வேந்தோணி விலக்கு ரோடு பகுதியில் இருந்து ஊர் வலத்தில் பங்கேற்றனர்.

சந்தை, சின்ன கடை, ஐந்து முனை, ஒட்டப்பாலம், ஆற்றுப்பாலம், பெரிய பஜார் வழியாக பெருமாள் கோயில் வைகை ஆறு படித் துறையை அடைந்தது. அங்கு அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண் டாடினர்.

நேற்று ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் வர்த்தகன் தெரு, வேர்க்கோடு, இந்திரா நகர், எம்.ஆர்.டி., நகர், புதுரோடு, பெரிய பள்ளிவாசல் தெரு, மல்லிகை நகர் உள்ளிட்ட 30 இடங்களில் வைக்கப் பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு தீபாராதனை நடந்தது.

ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், ராமேஸ்வரம் நகர் தலைவர் நம்புராஜன், துணைத் தலைவர் குமார், மாவட்ட பொறுப்பாளர்கள் வீரசவுந்திரராஜன், மேகநாதன், நாராயணன், ஆட்டோ முன்னணி செயலாளர் குமார், கர்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பின் டிராக்டர், லாரிகளில் விநாயகர் சிலைகளை ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டு கோயில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் கரைத்தனர்.

* கீழக்கரை அருகே கிழக்கு மங்களேஸ்வரி நகரில் 9 அடி உயர விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை கிழக்கு மங்களேஸ்வரி நகர் மன்னார் வளைகுடா கடலில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஏற்பாடுகளை தலைவர் செல்வம், செயலாளர் பால்ராஜ் மற்றும் கிழக்கு மங்களேஸ்வரி நகர் முத்தரையர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம், திருநகர் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் அகில பாரத அனுமன் சேனா, ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, பா.ஜ., சார்பில் விநாயகர் சதுர்த்தியன்று 61 மெகா விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகள் நேற்று மாலை 16 கால் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டன.

அங்கு பூஜை, தீபாராதனை நடந்தது. பின் கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட சிலைகள், செவ்வந்தி குளம் கண்மாயில் கரைக்கப்பட்டன.‌ இதில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.‌

எழுமலை:

எழுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹிந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் சார்பில் எழுமலையை சுற்றியுள்ள கிராமங்களில் 15 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.

நேற்று மாலை இந்த சிலைகள் எழுமலை ராஜகணபதி கோயில் முன்பு கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். பாஜ., கல்வியாளர் அணி மாநில பொதுச்செயலாளர் கருணாநிதி, ஹிந்து முன்னணி மத்திய அரசு வக்கீல் முருகன், புறநகர் மாவட்ட துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, பா.ஜ., ஓ.பி.சி., அணி மதுரை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மாத்துாரான், ஹிந்து முன்னணி சேடபட்டி ஒன்றிய நிர்வாகிகள் தலைவர் லட்சுமணன், துணைத் தலைவர் மாசாணகருப்பையா, பொதுச் செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று எழுமலை பெரியகுளம் கண்மாயில் கரைத்தனர்.

உடுமலை:

ஹிந்து மக்கள் கட்சி(தமிழகம்) சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 23 விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது.

ஊர்வலம் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் துவங்கி, உடுமலை நகரம் வழியாக மடத்துக்குளம் சென்றது. கட்சியின் மாநில செயலாளர் ரமணன் தலைமை வகித்தார்.

மாநில மகளிரணி தலைவர் நாகஜோதி வரவேற்றார். மாவட்ட தலைவர் பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் மணி முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தை அகில தந்திரி பிரசார சபா மாவட்ட செயலாளர் சரவணன் துவக்கி வைத்தார். மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. உடுமலை டி.எஸ்.பி., தையல்நாயகி தலைமையிலான போலீசார் ஊர்வலத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி, கம்பம், போடி பகுதியில் நேற்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விமர்சையாக நடந்தது.

தேனியில் பெரியகுளம் ரோடு பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோயில் அருகில் இருந்து நேற்று மதியம் ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலத்தை சிவமயானந்தா சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்தார். நகர தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். அமைப்பு நிறுவனர் ரவி, மாவட்ட தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ராமமூர்த்தி, கோவிந்த ராஜ், கனகுபாண்டி உள்ளிட்டோர் ஊர்வலத்தை ஒருங்கிணைத்தனர். 250 சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று அரண்மனைப்புதுார் முல்லைப்பெரியாற்றில் விஜர்சனம் செய்யப்பட்டன.மாலையில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து அரண்மனைப்புதுார் வரை சென்றது. நுாறுக்கும்மேற்பட்ட சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. வர்த்தகபிரமுகள் பத்ரிநாத் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் திலகர், ராம்கண்ணன் ஊர்வலத்தை ஒருங்கிணைத்தனர்.

விதவிதமான விநாயகர் சிலைகள் கம்பத்தில் நேற்று காலை ஹிந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் மாயலோகநாதன் தலைமையில் 80 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்றன. முன்னதாக அரச மரத்தில் இருந்து ஊர்வலம் கிளம்பி, பஸ் ஸ்டாண்ட் ரோடு, மாரியம்மன் கோயில் கிழக்கு வீதி, வ.உ.சி. திடல் , பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, பார்க் ரோடு, நகராட்சி வீதி வழியாக முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது. போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

உத்தமபாளையம்


உத்தமபாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த ஊர்வலத்தில் மாவட்ட ஹிந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா தலைமையில் 30 விநாயகர் சிலைகள் பங்கேற்றன. ஞானம்மன் கோயில் அருகே துவங்கி மெயின் ரோடு, வடக்கு ரத வீதி வழியாக முல்லைப் பெரியாற்றில் கரைக்கப் பட்டது.


போடி


இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜபாண்டியன் தலைமையில் நடந்தது. இந்து முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்குமார், தெற்கு மாவட்ட தலைவர் சுந்தர் முன்னிலை வகித்தனர்.


நகர பொதுச் செயலாளர் கண்ணன், செல்வக்குமார் வரவேற்றனர். நகர, ஒன்றிய பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபராதனைகள் நடந்தது. விழாவில் பா.ஜ., மாவட்ட செயலாளர் ராஜபாண்டி, முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், துணைத் தலைவர் மோகன்தாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், விவசாய அணி மாவட்ட தலைவர் தண்டபாணி, போடி நகர தலைவர் சித்ராதேவி, பொதுச்செயலாளர் சிவ குருநாதன், ஆர்.எஸ்.எஸ். மாநில ஒருங்கிணைப்பாளர் உமாராணி, த.வெ.க., வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ்உட்பட பலர் பங்கேற்றனர்.


வத்தலக்குண்டு


விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.


ஹிந்து முன்னணி சார்பில் வத்தலக்குண்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 60 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. விஜர்சன ஊர்வலம் முன்னிட்டு நேற்று மாலை அனைத்து சிலைகளும் வத்தலக்குண்டு காளியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன.


காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் கோட்டத்தலைவர் மணி, பா.ஜ., மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், ஹிந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முனியாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர் அண்ணாதுரை பங்கேற்க ஊர்வலம் துவங்கியது.

முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கண்ணாபட்டி வைகை ஆற்றுக்கு கொண்டு சென்று விஜர்சனம் செய்யப்பட்டன. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடந்தது.

ஒட்டன்சத்திரம்


திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் ஒட்டன்சத்திரம் பகுதியில் 45 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்தது. ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் நேற்று மாலை சிலைகள் ஊர்வலம் துவங்கியது. ஹிந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் ராஜா தலைமை வகித்தார். கோட்டச்செயலாளர் பாபா.கிருஷ்ணன் பேசினார். சமூக ஆர்வலர் முத்து, டாக்டர் துளசிராம் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாவட்ட பொறுப்பாளர் முனியப்பன், நகர தலைவர் செந்தில்குமார், பா.ஜ., மாநில பொறுப்பாளர்கள் பழனிச்சாமி, செந்தில்அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். செக்போஸ்டில் துவங்கிய ஊர்வலம் பழநி ரோடு, தாராபுரம் ரோடு, ஏ.பி.பி., நகர் வழியாக விருப்பாச்சி தலையூற்று பகுதிக்கு சென்றது. அங்கு அனைத்து சிலைகளும் விஜர்சனம் செய்யப்பட்டன. டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தேவகோட்டை


தேவகோட்டை நகர்,அருகில் உள்ள கிராமங்களிலும் , ஹிந்து அமைப்புகள், வேறு சில அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. சதுர்த்தி நேற்று முன்தினம் நிறைவடைந்ததை தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் முன்பு கொண்டு வரப்பட்டது. அனைத்து சிலைகளுக்கும் பூஜை நடந்தன. கருதாவூரணியில் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டது.


பெங்களூரு:


ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

ஜி.பி.ஏ.,வின் கீழ் செயல்படும் ஐந்து மாநகராட்சிகளிலும், ஏரிகள், நடமாடும் டேங்கர் லாரிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி அன்று (நேற்று முன்தினம்) மட்டும் பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சியில் 28,860 விநாயகர் சிலைகள்; கிழக்கு மாநகராட்சியில் 8,460; வடக்கு மாநகராட்சியில் 16,857; தெற்கு மாநகராட்சியில் 10,372; மேற்கு மாநகராட்சியில் 1,20,079 என மொத்தம் 1,84,628 சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பாலக்காடு:

விநாயகர் விசர்ஜன ஊர்வலம் பாலக்காட்டில் விமரிசையாக நடந்தது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், நேற்றுமுன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தாரைக்காடு நீராட்டு கணபதி கோவில், கல்பாத்தி மகா கணபதி கோவில், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில், கொடுவாயூர் ஆல் மரத்தடி கணபதி கோவில் ஆகிய முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பல்வேறு இடங்களில் ஹிந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று மதியம் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது.

யானைகள் அணிவகுப்புடன், மூன்று அடி முதல் 17 அடி வரையிலான 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டன.

கை அசைத்து ஆசி வழங்கும் கணபதி மாதிரியான விநாயகர் சிலை, ஊர்வலத்தின் சிறப்பம்சமாக இருந்தது.

முன்னதாக பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, விநாயகர் சிலைகள் மூத்தாந்தரை கண்ணகி அம்மன் கோவில் வளாகத்திற்கு, காலையில் எடுத்து வரப்பட்டன.

தொடர்ந்து ஊர்வலமாக, பாலக்காடு பெரிய கடை வீதி, பி.ஓ.சி., சாலை, முனிசிபல் பஸ் ஸ்டாண்ட் சென்றடைந்தது. அங்கு மாலை, 4:00 மணிக்கு நடைபெற்ற கலாசார மாநாட்டை, ஸ்ரீ ராமதாச ஆசிரமத்தின் தலைவர் சுவாமி ஸ்ரீசக்தி சாந்தானந்தா துவக்கி வைத்தார்.

தொடர்ந்து ஜி.பி., சாலை, சுல்தான்பேட்டை சந்திப்பு, தலைமை தபால் அலுவலகம் சாலை, விக்டோரியா கல்லுாரி சாலை, சின்மயா தபோவன் சந்திப்பு, சேகரிபுரம் வழியாக கல்பாத்தி ஆற்றுக்கு வந்தடைந்தன.

தொடர்ந்து ஆற்றின் ஐந்து படித்துறைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாலக்காடு நகரில், நேற்று மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !