அன்னை மீனாட்சி தாயே... நீயே துணை
அம்பிகையின் சன்னதியில் கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள். நல்லது நடக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உங்களுக்கு எப்போதும் துணையாக வருவாள் தாய் மீனாட்சி.
மாமதுரை
அங்கயற்கண் நாயகியே! அம்மையே – துங்க
ஒளியே! பெருந்திருவே! ஓதிமமே! உண்மை
வெளியே! பரபிரம வித்தே! அளிசேரும்
கொந்தளக பந்திக் குயிலே! சிவயோகத்
தைந்தருவே! மூவருக்கு அன்னையே! – எந்தமிடர்
அல்லல் வினையெல்லாம் அகற்றியே அஞ்சலென்று
நல்ல சவுபாக்கியத்தை நல்கியே – வல்ல பத்தி
ஆசுமது ரஞ்சித்ர வித்தாரம் என்றறிஞர்
பேசுகின்ற உண்மைப் பெருவாக்கு – நேசமுடன்
தந்தென்னை ஆட்கொண்டு சற்குருவாய் என்னகத்தில்
வந்திருந்து புத்திமதி கொடுத்துச் – சந்ததமும்
நீயே துணையாகி நின்றிரட்சி அங்கயற்கண்
தாயே சரணம் சரண்.
கொடிமரத்தில் சம்பந்தர்
சிவன் சன்னதி எதிரேயுள்ள கொடிமரத்தில் விநாயகர், நந்தி உருவங்கள் பொறிக்கப்படுவது வழக்கம். ஆனால் சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் சம்பந்தர் இருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் உண்டானது. அப்போது சிவனை வேண்டி சம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி, மடப்பள்ளி சாம்பலை கொடுத்து குணமாக்கினார். சமண சமயத்தினருடன் போட்டியிட்டு அவர்களை வென்று மீண்டும் சைவ சமயத்தை நிலைநாட்டினார். இவ்வாறு மதுரையில் சிவ வழிபாடு தழைப்பதற்கு காரணமாக இருந்தார்.
எனவே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சுவாமி சன்னதி கொடிமரத்தில் சம்பந்தரை வடித்துள்ளனர்.
பெண்ணின் நாணம்
மதுரையை பெண்ணாட்சி தலம் என சொன்னாலும், அன்னை மீனாட்சி பெண்களுக்கே உரித்தான அடக்கத்தோடுதான் (நாணம்) இருக்கிறாள் என்பதை பார்க்க முடியும். எப்படி என்றால்... கோயில் அமைப்பில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அவள் தன் கணவனை பின்தொடர்ந்து செயல்படுபவளாகவே இருக்கிறாள். இதனை உணர்த்தும் வகையில் அம்பாள் சன்னதி, சிவன் சன்னதிக்கு வலப்புறத்தில் சற்று பின்னால் தள்ளி இருக்கிறது. சுவாமி, அம்பாள் விமானங்களும் முன்னும், பின்னுமாகத்தான் உள்ளது. இந்த அமைப்பை பொற்றாமரைக் குளத்தின் மேற்கு கரையில் இருந்து பார்த்தால் புரியும். இதனால்தான் திருஞானசம்பந்தர், ‘தொடர்ந்து நின்ற என் தாயானே’ என பதிகம் பாடியுள்ளார்.