பரனுார் முருகர் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த பரனுார் முருகர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர் அடுத்த பரனுார் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட முருகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 15ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, பாராய ணம், மகாபூர்ணாகுதி, ஹரி அண்ணா தலைமையில் கடம் புறப்பாடாகி 8:30 மணிக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கு இடையே புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம், இரவு வானவேடிக்கையுடன் சுவாமி வீதி உலா நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.