மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெளியேற முடியாமல் தவிப்பு பக்தர்கள் அவதி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மேற்கு, தெற்கு வாசல்களை மட்டுமே இருவழிப் பாதையாக பயன்படுத்துவதால் பக்தர்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப். 17 ல் கும்பாபிஷே கம் நடந்தது. இதைத் தொடர்ந்து அக். 2 வரை தினமும் மண்டல பூஜைகள் நடக்கின்றன.
இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வெளியேற, வடக்கு, கிழக்கு கோபுரம், சுவாமி சன்னதி வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கின்றனர். இதனால் இருவழிப் பாதையாக உள்ள மேற்கு, தெற்கு கோபுர வழியில் நெரிசல் அதிகரித்துள்ளது. கோயிலில் பாதுகாப்பு சோதனைக்கான கருவிகள், பணியாளர்கள் இருந்தபோதும், வடக்கு கோபுரம் உள்ளிட்ட வாசல்கள் முழுமையாக பயன் படுத்தப்படாதது குறித்து பக்தர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் இரவு வரை வடக்கு, கிழக்கு கோபுரங்கள் வழியே வருவதற்கும், வெளியேறவும் அனுமதித்தனர். தற்போது வெளியேற மட்டுமே அனுமதிக்கின்றனர். இதனால் வடக்குமாசி, மேல மாசி வீதி, கார் பார்க்கிங் பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
இவர்கள் மேற்கு அல்லது தெற்கு கோபுர பகுதிக்கு செல்ல நீண்ட துாரம் சுற்றிச் செல்கின்றனர். இதனால் வயதானோர், உடல்நலப் பிரச்னை உள்ளவர்கள், குழந்தைகள் நடக்க முடியாமல் தவிக்கின்றனர். பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி, அனைத்து வாசல்களையும் பயன்படுத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.