சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கக் கிரீடம் பத்திரமாக இருக்கிறது; தேவசம் போர்டு தகவல்
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) தங்கக் கிரீடம் மாயமானதாக வெளியான தவகலை தேவசம் போர்டு மறுத்துள்ளது. சபரிமலையின் தங்கக் கிரீடம் பாதுகாப்பாக உள்ளதாக கேரள அமைச்சர் முரளீதரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.72 (445.76 கிராம்) சவரன் எடை கொண்ட தங்கக் கிரீடம் ஒன்று காணாமல் போயுள்ளது. நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கக் கிரீடத்தை எடுத்து விட்டு, அதேபோன்ற போலி கிரீடம் வைக்கப்பட்டது என தகவல் வெளியாகி இருந்தது.
இந்தக் கிரீடம் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நன்கொடை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது பாதுகாப்பு அறையில் வேறு கிரீடம் இருக்கிறது என்றும், விசாரணை நடக்கிறது என்றும் வெளியான தகவலுக்கு தேவசம் போர்டு மறுப்பு தெரிவித்தது. தங்க கிரீடம் காணாமல் போகவில்லை; பாதுகாப்பு அறையில் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
பாதுகாப்பாக இருக்கு!: இது குறித்து கேரள அமைச்சர் கே. முரளீதரன் கூறுகையில், ‘‘தேவசம் போர்டு தகவலின்படி, சபரிமலையின் தங்கக் கிரீடம் பாதுகாப்பாக உள்ளது. இது குறித்து கண்காணிக்க கூடுதல் மாவட்ட ஆட்சியர் (ADM) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்; அவர் அந்த இடத்தைப் பார்வையிட்டு விரிவான அறிக்கை ஒன்றை அளிப்பார். அந்த ஆய்வறிக்கை விரைவில் வெளியாகும்’’ என்றார்.