ஸ்ரீ விஜயேந்திரர் உடன் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் சந்திப்பு
காஞ்சிபுரம்: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், ஓரிக்கையில் சதுர்மாஸ்யம் மேற்கொண்டு வரும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்தார்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளால் நடத்தப்பட்ட ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர சுவாமி அபிஷேகத்தை மோகன் பாகவத் முதலில் தரிசித்தார். பின்னர், சமூகம், நாடு மற்றும் உலக நலனுக்காக வேத அறிஞர்கள் நடத்திய வேத பாராயணம், ஜபம் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளில் அவர் கலந்து கொண்டார்.
ஆதி சங்கராச்சார்யரின் திவ்ய பாதுகைகளுக்கு தோடகாஷ்டக பாராயணத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. பீடத்தின் சார்பில் பாகவத்துக்கு பாரம்பரிய தலைப்பாகை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. காமாட்சி கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது. மகாமஹோபாத்யாய கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் தலைமையில் மூத்த வேத அறிஞர்கள் வேத மந்திரங்களை முழங்கினர்.
குடும்பம் மற்றும் தர்மநெறி மதிப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஸ்ரீ விஜயேந்திரர் மற்றும் மோகன் பாகவத் முன்னிலையில் பாரம்பரிய தம்பதி பூஜை நடைபெற்றது. அறுபது ஆண்டுகள் மணவாழ்க்கையை நிறைவு செய்த முதிய தம்பதி, 60 முதிய தம்பதிகளை இந்நிகழ்வில் கவுரவித்தனர்.
உலக மக்கள் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமெனும் பிரார்த்தனையுடன் நடைபெற்ற சங்க்ரஹணீயேஷ்டி எனப்படும் ஷ்ரௌத சடங்கின் பூர்ணாஹுதியையும் பாகவத் கண்டுகளித்தார்.
அவரது பயணத்தின் போது, காஞ்சி மடத்தின் வித்யா, வேதம் மற்றும் வைத்யம் சார்ந்த பல்வேறு பணிகளை அவர் பார்வையிட்டார். பள்ளிகள், வேத பாடசாலைகள், பாரம்பரிய கைவினை மற்றும் சிற்பக்கலைப் பயிற்சி மையங்கள், சிறுமிகளுக்கான கலாசாரக் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும். ஆச்சார்யரின் ஆசீர்வாதத்துடன் நடத்தப்படும் கோயில் நிர்வாகப் பயிற்சி வகுப்பின் முதல் அணியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
பின்னர், 1955ம் ஆண்டு குருஜி எம்.எஸ். கோல்வால்கர், காஞ்சி மகாசுவாமிகளைத் தரிசித்த ஓரிக்கையில் உள்ள நூற்றாண்டு பழமையான கிராமத்து வீட்டை பாகவத் பார்வையிட்டார். அந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், அந்தக் குடும்பத்தினர் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினர். 1988ம் ஆண்டிலும் காஞ்சி ஆச்சார்ய திரிவேணி இதே இடத்தில் சதுர்மாஸ்யம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. பீடத்தின் ஆசீர்வாதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.