உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்.,10ல் தொடக்கம்

 காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்.,10ல் தொடக்கம்

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை நடைபெறுகிறது.


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில், நவராத்திரி விழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான நவராத்திரி விழா அக்., 10ம் தேதி காலை பூர்வாங்க சண்டி ஹோமத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி தினமும் காலை காமாட்சியம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரமும், நவாவர்ண பூஜை, கன்யா பூஜை உள்ளிட்டவையும், இரவு, நவராத்திரி மண்டபத்தில் காமாட்சியம்மன் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சியும், தீபாராதனையும் மற்றும் பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்கும் சங்கீத இசை நிகழ்ச்சி நடைபெறுகின்றன. அம்பாளுக்கு முக்கிய நாட்களாகிய நவராத்திரி வைபவத்தில் லட்சார்ச்சனை மற்றும் சதுர்வேத பாராயணம், சண்டி சப்தசதி பாராயணமும், நவராத்திரி விழாவின், ஒன்பதாவது நாளான அக்., 18ம் தேதி இரவு, துர்காஷ்டமி, துர்க்கை புறப்பாடு, சூரசம்ஹாரம் பூர்த்தியும், அக்., 19ம் இரவு சரஸ்வதி பூஜையும், அக்., 20ம் தேதி இரவு விஜய தசமி, நவாவர்ணம் பூர்த்தியும், தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன. அக்., 21ம் தேதி இரவு சகஸ்ர கலச ஸ்தாபனம், அக்., 22ம் தேதி காலை சகஸ்ர கலசாபிஷேகம், இரவு ஊஞ்சல் உத்சவத்துடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் சாரதா நவராத்திரி கலை நிகழ்ச்சிகள் டிரஸ்ட் சார்பில், காமாட்சியம்மன் கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் தினமும் இரவு 7:30 மணிக்கு பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்கும் இன்னிசை மற்றும் இதர கலை நிகழ்ச்சி நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !