வடலூரில் வள்ளலார் 204 வது அவதார திருநாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் அடுத்த மருதூரில் அவதரித்தார். பின்னாளில் வடலூரில் சத்திய சன்மார்க்க சங்கம் மற்றும் சத்திய ஞான சபை நிறுவி சன்மார்க்கத்தையும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் போதித்தார். மேலும் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் மாதம் தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகள் நீக்கி மாத ஜோதி தரிசனமும். ஆண்டுதோறும் தை மாசத்தில் வரும் பூச நட்சத்திர தினத்தன்று தைப்பூச பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்காக தமிழக மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். மேலும் வடலூருக்கு வருகை தரக்கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வள்ளலார் தோற்றுவித்த அணையா அடுப்பு மூலம் மூன்று வேலையும் உணவளிக்கப்பட்டு வருகிறது. இன்று வள்ளலார் அவதரித்து 204 ஆவது ஆண்டு அவதாரத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக வள்ளலார் அவதரித்த மருதூர் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி சத்திய தருமசாலை வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகம் உள்ளிட்ட இடங்களில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்திய ஞான சபையில் வள்ளலார் சத்திய ஞான சபை அமைக்க இடம் வழங்கிய பார்வதிபுரம் மக்கள் சீர்வரிசை தட்டுகள் எடுத்து வந்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வடலூர் சத்திய ஞான சபையில் கடந்த மாதம் புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.. இதைத் தொடர்ந்து வள்ளலார் அருளிய அகவல் பாராயணம் ஓதும் நிகழ்ச்சி நடைபெற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.