உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி விழா; பந்தக்கால் நடப்பட்டது

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி விழா; பந்தக்கால் நடப்பட்டது

சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் திருக்கோயிலில், நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


தெற்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு வடிவுடையம்மனை முன்னிட்டு நடைபெறவுள்ள நவராத்திரி திருவிழாவை வரவேற்கும் விதமாக, கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து கோவில் பிரகாரத்தில் குறிப்பிட்ட இடத்தில் நவதானியங்கள் விதைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பந்தக்காலுக்கு முதலில் பெண்கள் புனித நீரால் அபிஷேகம் செய்து, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பக்தியுடன் பந்தக்காலை வழிபட்டனர்.


தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அனைவரும் ‘அன்னையே பராசக்தியே’ என பக்தி கோஷங்களை எழுப்பி, அம்மனை வழிபட்டனர். நவராத்திரி விழா வருகின்ற 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினந்தோறும் அம்மனுக்கு தபசு, அலங்காரம்  பராசக்தி, நந்தினி, கௌரி, பத்மாவதி, உமா மகேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளன. மேலும், தினந்தோறும் சுவாமி வீதி உலா, மாடவீதி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. திருக்கோயில் வளாகத்தில் பக்தி இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் திருக்கோயிலில் தேவிக்கு நடத்தப்படும் சிறப்பு வழிபாட்டு விழாவான தசரா பண்டிகை, புராண மற்றும் சைவ ஆகம சிறப்புகளை கொண்ட நவராத்திரி திருவிழாவாக ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற தொண்டைநாட்டில் அமைந்துள்ள 32 சிவத்தலங்களுள் நடுநாயகமாக விளங்கும் திருவொற்றியூர் புண்ணிய பூமியில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் வடகிழக்குப் பகுதியில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய சக்திகளின் சொரூபமாகிய பராசக்தி தேவி, திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். திருநாவுக்கரசர் பெருமானால் ‘வடிவுடை நாயகி’ எனப் போற்றிப் பாடப்பெற்ற சிறப்பும் இந்த அம்பிகைக்கு உண்டு. வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை அருளும் சிறப்புமிக்க வடிவுடையம்மனை தரிசித்து வழிபடுவதற்காக, நவராத்திரி திருவிழா நாட்களில் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவொற்றியூருக்கு வருகை தர உள்ளனர். நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெறும் லட்சார்ச்சனை, சிறப்பு அலங்காரங்கள், தீப, தூப ஆராதனைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !