விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ரா உற்சவம்; தீர்த்தவாரி
மன்னார்குடி; மன்னார்குடி அருகே உள்ள விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு செங்கமலவல்லி தாயார், ருக்மணி,சத்யபாமா உடன் உற்சவர் ராஜகோபாலன் சுவாமி யாகசாலையில் எழுந்தருளினார். சுவாமிகளுக்கு பல்வேறு மங்களப் பொருட்களை சமர்ப்பித்து நிறைவாக பூர்ணாஹூதி நடத்தப்பட்டது.
சன்னதியில் ரங்கநாயகி, பூதேவி, ஶ்ரீ தேவி சமேத கஸ்தூரிரங்க பெருமாள் வண்ணமயமான, பட்டு பவித்திர மாலைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமியை எழுந்தருளிய சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் சுவாமியை தலையில் சுமந்தபடியே கோவிலில் பிரகாரமாக வலம் வந்து தீர்த்தவாரி நடத்தினர். நிறைவாக சிறப்பு தீப ஆராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.