மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலுக்கு ரூ.1.50 கோடியில் புதிய வெள்ளி ரிஷப வாகனம்
மயிலாடுதுறை: வதான்யேஸ்வரர் கோவில் புதிய வெள்ளி ரிஷப வாகன பிரதிஷ்டை விழா மற்றும் வெள்ளோட்டம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது;
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் கோயிலில் அன்பே சிவம் அறக்கட்டளை சார்பில் காவிரி துலா உற்சவத்தின் போது சாமி வீதிஉலா செல்வதற்காக புதிய வெள்ளி ரிஷப வாகனம் 45 கிலோ எடையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டுள்ளது. புதிய வெள்ளி ரிஷப வாகன பிரதிஷ்டை விழா மற்றும் வெள்ளோட்ட வீதி உலா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு வதான்யேஸ்வரர், ஞானாம்பிகை, மேதா தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் செய்து, புனிதநீர் கொண்டு வெள்ளி ரிஷபத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீப ஆராதனை நடந்தது.
தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் வெள்ளி ரிஷப வாகனத்திற்கு பிரதிஷ்டை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து தருமபுரம் ஆதீனம், வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக கோயில் சன்னதிகளில் வழிபாடு செய்த குருமகா சன்னிதானம் கூறுகையில், ஐப்பசி மாதம் முதல் துலா உற்சவத்திற்கு புறப்பாடு செய்ய வேண்டும் என்ற சங்கல்பத்திலே, இதை முதலாவதாக இன்றைய நாள் வெள்ளோட்டம் செய்யப்படுகிறது. கடைமுழுக்கு விழாவிற்கு முன்பு ஞானாம்பிகைக்கும் சேர்த்து இந்த ஆண்டு 2 வெள்ளி ரிஷப வாகனங்கள் புறப்பாடாகும். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டுக்குள் பஞ்ச மூர்த்திகளுக்கும் நாம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை அன்பர்கள் மூலமாக சிவாச்சாரியார் ஏற்பாடு செய்து வருகிறார். ஐப்பசி மாதம் துலா உற்சவத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் எழுந்தருளும் பாக்கியத்தை பக்தர்கள் தரிசித்து அருள் பெற வேண்டும் என்றார். அன்பே சிவம் அறக்கட்டளை தலைவர் பாலசந்திர சிவாச்சாரியார், ராஜேஷ் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில வெள்ளி ரிஷப வாகனம் தயார் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் சிவகுருநாதன், முக்கிய பிரமுகர்கள் சிவலிங்கம், பாண்டுரங்கன், செந்தில்வேல், கவுன்சிலர் ரமேஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.