நூற்றாண்டு பழமையான காக்கா தூக்கி சிவன் கோவிலை, புனரமைக்க சொர்ண பிரசன்னம்
பந்தலூர்: பந்தலூர் அருகே நெல்லியாலம் பகுதியில் வாழ்ந்து வந்த ராணி போரம்மா ஆட்சி செய்த போது, காக்காதூக்கி அம்பலம் என்ற இடத்தில் சிவன் கோவில் அமைத்து வழிபட்டு வந்துள்ளார்.
சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், அரசர்களின் ஆட்சி காலத்திற்கு பின்னர் உள்ளூரை சேர்ந்த சிலர் வழிபட்டு வந்துள்ளனர். காலப்போக்கில் கோவிலில் இருந்த பழமையான மர உத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் காணாமல் போனது. தொடர்ந்து சிதிலமடைந்து காணப்பட்ட கோவிலை புனரமைக்கும் பணியில் உள்ளூர் பகுதியை சேர்ந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திப்பு சுல்தான் படையெடுப்பின் போது, கோவில் கருவறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விலைமதிப்புள்ள பொருட்களை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 10 அடி ஆழத்திற்கு சிலர் குழி தோண்டி எடுத்துச் சென்றதாகவும் புகார் உள்ளது.
இந்நிலையில் கோவிலை மறு புனரமைப்பு செய்வதற்காக, கோவில் கமிட்டியினர், நெல்லியாலம், பொன்னானி, உப்பட்டி, குந்தலாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, பக்தர்கள் ஒன்றிணைந்து கர்மிகத்வம் மற்றும் சொர்ண பிரசன்னம் பார்க்கும் சிறப்பு பூஜையை நடத்தினார்கள். கோவில் கமிட்டி தலைவர் நவநீதராஜா, செயலாளர் கங்காதரன், பொருளாளர் போஸ் தலைமையில், கேரளா சென்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீநாத் பணிக்கர், ஸ்ரீ புருஷோத்தமன் பணிக்கர், ஸ்ரீ சசிதரன் பணிக்கர் ஆகியோர் பூஜை செய்து பிரசன்னம் பார்த்தனர். அதில் பழமையான அரச குடும்பத்தை சேர்ந்தவர்களின் வழிபாட்டு தளமாக இந்த பகுதி இருந்திருக்கும் என்றும், சிவபெருமான் மற்றும் அதனை சார்ந்த தெய்வங்கள் வழிபாட்டு தெய்வங்களாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து இன்று பிரசன்னம் பார்த்த பின்னரே முழு தகவல் தெரிய வரும் என பணிக்கர் குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து பழமையான சிவ விக்கிரகத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சித்தார்த்தன், துணைச் செயலாளர் முனியாண்டி, துணைப் பொருளாளர் பிரகாஷ் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆன்மீக அன்பர்கள், பழங்குடியின பக்தர்கள் பங்கேற்றனர்.