தங்க கோவிலில் ரூ.21 கோடியில் ஸ்ரீ சுவர்ண லட்சுமி சிலை பிரதிஷ்டை!
வேலூர்: வேலூர் தங்க கோவிலில், 21 கோடி ரூபாயில், 70 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்ட, ஸ்ரீ சுவர்ண லட்சுமி விக்ரகம் கண் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
வேலூர் நாராயணி பீடத்தில் சக்தி அம்மா நிருபர்களிடம் கூறியதாவது:உலக மக்களை ஆன்மிக வழியில் ஈர்த்து, அவர்களுக்கு தேவையான அமைதியையும், ஞானத்தையும் தரும் வகையில், ஸ்ரீபுரம் அமைத்து, அதில், மகாலட்சுமிக்கு தங்கக் கோவில் கட்டி, தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.தங்க கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும், தெய்வத்துடன் தனிப்பட்ட தெய்வீக தொடர்பை ஏற்படுத்தும் வகையில், 21 கோடி ரூபாய் மதிப்பில், 70 கிலோ தங்கத்தால், மகாலட்சுமியின் திரு உருவத்தை தங்க விக்கிரமாக செய்து, தங்க கோவிலில் பிரதிஷ்டை செய்ய இருக்கிறோம்.சிலை இரண்டரை அடி உயரம், 70 கிலோ எடை கொண்டது. நான்கு கைகளுடன் தாமரை மலர்கள் மேல் பத்மானசத்துடன், இரண்டு கைகளில் தாமரை புஷ்பங்கள், இரண்டு கைகளில் அபய கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.இதில், விசேஷம் என்னவென்றால் தங்க கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தரும், தங்கள் கைகளால், ஸ்ரீ சுவர்ண லட்சுமி எனப்படும், ஸ்ரீ தங்க லட்சுமியை துளசி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யலாம்.இந்த தெய்வீக வைபவத்தின் முதல் கட்டமாக, 70 கிலோ தங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ சுவர்ண லட்சுமி விக்ரகத்துக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. சுவர்ணலட்சுமிக்கு, தங்கக் கோவில் வளாகத்தில் தனியாக கோவில் அமைத்து, அதில் ஸ்ரீபுர சீனிவாசன் என்ற பெயரில் பெருமாள் விக்ரகம் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.பெருமாள் கோவில் கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபத்தில், ஸ்ரீ சுவர்ண லட்சுமி விக்ரகம் நிரந்திரமாக பிரதிஷ்டை செய்யப்படும்.இவ்வாறு கூறினார்.