உடுமலை கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
உடுமலை: உடுமலை ஐஸ்வர்யா நகர், ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
உடுமலை ஐஸ்வர்யா நகரில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கஜவல்லி, வன வல்லி சமேத கல்யாண சுப்ரமணியர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிேஷக விழா யாக சாலை பூஜைகள், கடந்த, 21ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் (25ம் தேதி) காலை, 5:00 மணிக்கு, மங்கள இசையுடன் நான்காம் கால யாக பூஜைகள் துவங்கி, நிறை வேள்வி, கலசம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 8:30 மணிக்கு, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர் விமானங்களுக்கு, சம காலத்தில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு, மூலவர்களான, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமதே ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர் சுவாமிகளுக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், மகா ஹவிர் நிவேதனம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இதில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், கவுமார மடாலயம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் மற்றும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, தலைவர் லோகநாதன், செயலாளர் நீலகண்டன், பொருளாளர் வீரராகவன், துணைத்தலைவர் சிதம்பரசாமி, துணைச்செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாக அறங்காவலர்கள் செய்திருந்தனர்.