கள்ளக்குறிச்சியில் 12 ஜோதிர் லிங்க தரிசன வழிபாடு துவங்கியது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 12 ஜோதிர் லிங்கங்கள் தரிசன வழிபாடு நேற்று துவங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 12 ஜோதிர் லிங்கங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வைத்து வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அண்ணா நகர் வி.ஏ.எஸ்., திருமண மகாலில் நேற்று துவங்கிய இந்த தரிசன வழிபாடு வரும் 28ம் தேதி வரை தினமும் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. பக்தர்கள் 12 ஜோதிர் லிங்கங்களையும் தரிசிப்பதோடு, பக்தர்களே அபிஷேகம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. நேற்று துவங்கிய வழிபாட்டில் நடராஜர், சமயக்குறவர்கள் 4 பேர், அம்மையப்பர் ஆகிய உற்சவர் சிலைகளோடு கோமுகி நதிக்கரையிலிருந்து கயிலை வாத்தியங்கள் முழங்க கலச ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட சோமநாதர், மல்லிகார்ஜூனர், மகாகாளேஸ்வரர், ஓங்காரேஸ்வரர், கேதார்நாதர், பீமாசங்கர், மஹாகேஸ்வரர், வைத்தியநாதர், நாகேஸ்வரர் ஆகிய 12 ஜோதிர் லிங்கங்கங்களுக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இந்த 12 ஜோதிர்லிங்கங்களும் வரும் ஜனவரியில் திருச்சி சீராதோப்பு பகுதியில் ஒரே இடத்தில் நிறுவி, கும்பாபிஷேகம் செய்து வழிபாடு துவங்க உள்ளது.