காசியில் மேற்கு வங்க பக்தர்களுக்கு சமய தீட்சை வழங்கிய தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட பழமையான சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் காசியில் நடைபெறும் ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாத்திரை சென்றுள்ள நிலையில் இன்று காசி கங்கை நதி கரையில் சிறப்பு பூஜைகள் செய்து புனித நீராடிய பின்னர் காசி தருமபுரம் ஆதீனம் திருமடத்திற்கு எழுந்தருளி ஆன்மார்த்த சொக்கநாத பூஜை செய்தது, திருமடத்தில் குருமுதல்வர் குருஞான சம்பந்தரின் திரு உருவ சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து குருமஹா சன்னிதானம் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் சுபோஜித் மேடக், தபன் ராய், ஆகாஷ் பௌமிக், சந்திப் செட், சபர்ணா செட் ஆகியோருக்கு சமய தீட்சை அளித்து, அருளாசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன தம்பிரான்கள் மற்றும் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.