கல்பாத்தி தேர் திருவிழாவின் ஆயத்தப் பணிகள் துவக்கம்; புதிய வாகனங்கள் கோவில் வந்தது
பாலக்காடு: கல்பாத்தி திருத்தேரோட்ட விழாவை முன்னிட்டு, திருவிழாவுக்கான ஆயத்தப் பணிகள் பக்திப் பரவசத்துடன் தொடங்கின.
கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்ட விழாவிற்கு வருகிற 8ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. வருகிற 14, 15, 16 தேதிகளில் திருத்தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்காகப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மூஷிக வாகனம், ரிஷப வாகனம் மற்றும் மயில் வாகனம் ஆகியவை நேற்று கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலை வந்தடைந்தன. தொடர்ந்து, கோவிலின் தலைமை அர்ச்சகர் சபாபதி சிவாச்சாரியார் மற்றும் தலைமைப் புரோகிதர் பிரபு சிவாச்சாரியார் தலைமையில் மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க வாகனங்களுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் சிவன் கோவில் தலைமை நிர்வாக அறங்காவலர் சுஜித் குமார் வர்மா, புதிய கல்பாத்தி கிராமத் தலைவர் கிருஷ்ணா, சாத்தபுரம் கிராமச் செயலாளர் முரளி ராமநாதன், பழைய கல்பாத்தி பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலர் மகேஷ் கிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். இதேபோல், திருவிழா கொண்டாடும் உப கோவிலான சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவிலில் தேரோட்டத்திற்கான பந்தக்கால் (முகூர்த்தக்கால்) நடும் வைபவம் ஸ்ரீகாந்த் பட்டாச்சாரியார் முன்னிலையில் நடைபெற்றது.