புதுப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
கம்பம்: கம்பம் புதுப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
க. புதுப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா புதுப்பட்டி மற்றும் அனுமந்தன்பட்டி கிராமங்களில் கொண்டாடப்படுகிறது. பால்வியாபாரி தடுக்கி விழுந்த இடத்தில் சுயம்புவாக அம்மன் தோன்றியதால், இத் திருவிழாவை இரு கிராமங்களும் கொண்டாடுகின்றனர். பால் வியாபாரி அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர், அவர் விழுந்த இடம் புதுபபட்டி. எனவே இரு ஊர்களிலும் கோயில் கட்டி ஆண்டுதோறும் ஐப்பசியில் கொண்டாடுகின்றனர்.
அனுமந்தன்பட்டியில் திருவிழா கொண்டாடிய பின் அம்மன் அங்கிருந்து ஊர்வலமாக புதுப்பட்டிக்கு அழைத்து வரப்பட்டது. ஒரு வாரம் திருவிழா நடந்தது. மஞ்சள் நீராட்டம், மாவிளக்கு எடுத்தல், வண்டி வேஷம் , அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார். திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து அம்மன் அனுமந்தன்பட்டிக்கு புறப்பட்டு சென்றது.