உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலந்தீபாவளி கொண்டாட்டம் வடசித்துாரில் திருவிழாக்கோலம்

மயிலந்தீபாவளி கொண்டாட்டம் வடசித்துாரில் திருவிழாக்கோலம்

நெகமம்: கோவை, கிணத்துக்கடவு வடசித்துார் கிராமத்தில் மயிலந்தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, வடசித்துார் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகளை பரிமாறி மயிலந்தீபாவளியை கொண்டாடுகின்றனர். கடந்த, 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. வடசித்துாரில், ஹிந்துக்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமிய குடும்பத்தினரும் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் உறவினர்களாக பழகி வருவதால், ஆண்டு தோறும் மயிலந்தீபாவளியில் இஸ்லாமியர்களும் கலந்து கொள்கின்றனர். மேலும், ஜாதி மதம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக பண்டிகையை கொண்டாடுகின்றனர். மயிலந்தீபாவளி நாளான நேற்று, வடசித்துார் ஊராட்சி அலுவலகம் அருகே, ராட்டிணங்கள், பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், இனிப்பு, பலகார கடைகள், பெண்களுக்கான அணிகலன் கடைகள் அமைக்கப்பட்டு ஊரே திருவிழா கோலமாக காட்சியளித்தது. திருமணமாகி வெளியூரில் வசிக்கும் பெண்களும் குடும்பத்துடன், பெற்றோர் வீட்டிக்கு வந்து மயிலந்தீபாவளியை புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர். இஸ்லாமியர்களை, தங்களது வீட்டுக்கு அழைத்து, ஹிந்துக்கள் விருந்து வைத்து, ஒருவருக்கொருவர் நட்பை பகிர்ந்து பண்டிகையை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !