வடபழனி முருகப் பெருமான் கோவிலில் கந்த சஷ்டி விழா: லட்சார்ச்சனை துவக்கம்
சென்னை: வடபழனி முருகப் பெருமான் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா முன்னிட்டு லட்சார்ச்சனை இன்று துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை நகரில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக, வடபழனி முருகப் பெருமான் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா வரசித்தி விநாயகரின் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் நேற்று 9ம் தேதி துவங்கியது. விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு மங்களகிரி விமானத்தில் பாலசுப்ரமணியர் புறப்பாடு நடக்கிறது.
வரும், 15ம் தேதி வரை தினமும் காலை முதல் மதியம் வரையிலும் , மாலை முதல் இரவு வரையிலும் லட்சார்ச்னை நடக்கிறது. வரும், 11ம் தேதி முதல் சந்திரபிரபை, ஆட்டுக்கிடா, நாக, மங்களகிரி விமானம் ஆகியவற்றில் பாலசுப்பிரமணிய சுவாமி மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் பிரதான நாளான, 15ம் தேதி காலை 6:00 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவங்கி, உச்சி காலத்துடன் பூர்த்தியாகிறது. அதை தொடர்ந்து, தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் வாகன புறப்பாடு நடக்கிறது. வரும், 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கல்யாணம்; மயில் வாகன புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. நவ.,17ம் தேதி முதல், 19ம் தேதி வரை இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.