இன்று சஷ்டி விரதம் மூன்றாம் நாள்: திருச்செந்தூரில் முருகப்பெருமானே தினமும் வந்து வழிபடும் இடம் இருக்கு தெரியுமா?
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோயிலில் மூலவர் சன்னதியை ஒட்டி ஒரு குகை உள்ளது. அதில் ஒரு பீடத்தில் அமைந்துள்ள ஐந்து லிங்கங்களை முருகப் பெருமான் பூஜிப்பதாக ஐதிகம். அதனால் மானிட பூஜை கிடையாது. இக்குகையின் மேற்புறத்தில் ஒரு சிறு இடைவெளி உள்ளது. இதன் வழியாக தேவர்கள் சென்று தினமும் 5 லிங்கங்களையும் பூஜித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. கந்த சஷ்டி விரதத்தின் மூன்றாம் நாளில் முருகனை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி மனதில் தைரியமும் நம்பிக்கையும் பெருகும். முருகப்பெருமானின் அருளால் குடும்பத்தில் உள்ள துன்பங்கள் நீங்கி, அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி பெருகட்டும்!