உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேஷம்: ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

மேஷம்: ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

பராபவ ஆண்டு ஐப்பசி 27 (நவ.13) வெள்ளிக்கிழமை மாலை 5:14 மணிக்கு ராகு கும்பத்தில் இருந்து மகரத்திற்கும், கேது சிம்மத்தில் இருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர்


அசுவினி:  தேடிவரப்போகும் பதவி


உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சஞ்சரித்து வந்த ராகு, தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிலும், இதுவரை பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சஞ்சரித்து வந்த கேது நாலாம் வீடான மாதுர் மற்றும் சுக ஸ்தானத்திலும் நவ. 13, 2026 முதல் சஞ்சரிக்க உள்ளனர். 

 

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ராகு சஞ்சரிக்கப்போவதால் செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சூழ்நிலையின் காரணமாக மூடி வைக்கப்பட்டிருந்த தொழில்களை மீண்டும் திறந்திடக்கூடிய நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி தேடி வரும். அதிகாரம் செய்யக்கூடிய இடத்தில் அமரும் நிலையும் சிலருக்கு ஏற்படும். சமூகத்தில் உங்களுக்கென்று தனி செல்வாக்கும் அந்தஸ்தும் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றாலும், தொழிலில் நேர்மையுடன் நடந்துகொள்வது நன்மையளிக்கும். கேதுவின் நான்காம் இட சஞ்சாரத்தால் தாய்வழி உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். சிலருக்கு தாயாருடன் கருத்து வேறுபாடும் உண்டாகும். உயர்கல்வி, மற்றும் வேலையின் காரணமாக சிலர் தாயாரை விட்டு விலகிச் செல்லவும் நேரும். வீடு நிலம் மற்றும் வாகனம் வாங்குவதில் தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகும். சிலருக்கு பழைய வீடுகளை வாங்கி புதுப்பித்துவாழும் நிலை ஏற்படும். வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு சங்கடம் இருந்து கொண்டிருக்கும். வாகனப் பயணத்தின்போது கவனமாக இருப்பது நன்மையளிக்கும். 


தொழில் ஸ்தானத்தில் ராகுவும், மாதுர் ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில், தொழில் காரகனான சனி பகவான் 2028 ஏப். 24 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உழைப்பு உழைப்பு என்று ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நிலை உண்டாகும்.


பொதுப்பலன்  செவ்வாயின் ஆதிக்கமும் கேதுவின் சக்தியும் கொண்ட உங்களுக்கு, 2028 ஜூன் 1 வரை தொழில் ஸ்தான ராகு தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தனக்காரகன் குருவின் பார்வைகள் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். உத்தியோகம் தொழில் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.


தொழில் 

தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட நெருக்கடியும் பிரச்னைகளும் நீங்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், மருத்துவம், கெமிக்கல், எக்ஸ்போர்ட், அரசியல், சினிமா, ஊடகம், தொழில்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.


பணியாளர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி தேடிவரும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.


பெண்கள் 

குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். சிலருக்கு காதல், அதன்வழியாக திருமணம் என்ற நிலை உருவாகும். திருமண வயதினருக்கு வரன்வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியமும் பிள்ளைகளால் பெருமையும் ஏற்படும்.

கல்வி 

ஞானக்காரகன் குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும். இதுவரை படிப்பில் தடைகளை சந்தித்து வந்தவர்களுக்கு நிலை மாறும். உயர்கல்வி பயின்று வருபவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனை நன்மைதரும்.


உடல்நிலை 

விரய ஸ்தானத்தில் சனி, நான்காம் இடத்தில் கேது என்ற சஞ்சார நிலைகளால் உடலில் அவ்வப்போது ஏதேனும் சங்கடங்கள் வந்து நீங்கும். சிலருக்கு மருத்துவச் செலவு கூடுதலாகும் என்றாலும், மருத்துவத்தால் அவை சீராகும். 


குடும்பம்

தொழில் ஸ்தான ராகுவால் வருமானம் அதிகரிக்கும். சொத்து வாகனம் என்ற கனவு நனவாகும். குரு சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். 


பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் ஏற்பட்ட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.


பரணி: தொழிலில் முன்னேற்றம்


உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து நன்மைகளை வழங்கி வந்த யோகக்காரகன் ராகு, நவ. 13 முதல் பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ஞான மோட்சக்காரகன் கேது நான்காமிடமான சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.


ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம் என்னும் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, உங்கள் நட்சத்திராதிபதி சுக்கிரனுக்கும், அவர் சஞ்சரிக்கும் மகர ராசியின் அதிபதி சனி பகவானுக்கும் நட்பானவர் என்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் திறமை வெளிப்படும். மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளை எடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தொழில் வளர்ச்சி அடையும்.  முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை இருக்கும். புதிய வாகனம், இயந்திரம் வாங்கிடக்கூடிய அளவிற்கு வசதி உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், சங்கடங்கள் விலகும். பிரபலங்களின் ஆதரவால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் தீரும். ஆடம்பர செலவுகள் செய்து சமூகத்தில் நற்பெயர் வாங்குவீர்கள். பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் யோகக்காரகனும் போகக்காரகனுமான ராகு இக்காலத்தில் அவர் வழங்கும் பலன்களை யோகப்பலன்களாகவே வழங்கிட இருக்கிறார். பயணத்தினால் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த தகவல்கள் உங்களை வந்தடையும். வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி அடையும். சேமிப்பு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். 


கேதுவின் நான்காம் இட சஞ்சாரத்தால் தாயாரின் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். மருத்துவ செலவுகளால் கையிருப்பு கரையும். வேலைப் பார்ப்பவர்களுக்கு தங்கள் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த முடியாமல் போகும். வேலைபளு அதிகரிக்கும்.  உடல் நிலையில் ஏதேனும் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். மனதிலும் குழப்பம் அதிகமாகும். தவறான நண்பர்களின் சேர்க்கையால் தவறான பழக்கங்கள் ஏற்படும். ஒழுக்கத்திற்கு மாறான செயல்களில் ஈடுபடுவீர்கள். வீடு வாகனம் போன்றவற்றில் பழுதுபார்ப்பு செலவுகள் கூடும்.


பொதுப்பலன் வியாபாரம் தொழில் வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சிம்ம குருவின் சஞ்சாரத்தால் சிரமங்கள் விலகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணப்பழக்கம் அதிகரிக்கும். நினைப்பது நடந்தேறும். அரசியல்வாதிகள் கலைஞர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். திடீர் வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் உயரும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று வசித்திடக்கூடிய யோகம் உண்டாகும்.


தொழில்

தொழில்காரகன் சனி பகவானின் ராசிக்குள், தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால், சிறிய முயற்சியிலும் பெரிய லாபம் ஏற்படும். செய்து வரும் தொழில் விரிவடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், சினிமா, சின்னத்திரை, வாகனத் தொழில், ஸ்டேஷனரி, அழகு சாதனம், பேன்சி ஸ்டோர், ஹார்ட்வேர், ஆட்டோ மொபைல்ஸ், மருத்துவம் தொழில்களில் லாபம் அதிகரிக்கும். ஜோதிடர்கள், ஆலோசகர்கள் கலைஞர்களின் நிலை உயரும் .


பணியாளர்கள் வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு மனதில் இருந்த குழப்பம் விலகும் சிலருக்கு பி.ஆர் கிடைக்கும். நிம்மதியான நிலை உருவாகும் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலை பளு கூடினாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும்.


பெண்கள்

ஜீவனம் மற்றும் சுக ஸ்தானங்களில் பாப கிரகங்கள் சஞ்சரிப்பதால் பார்த்துவரும் வேலையிலும், குடும்பத்திலும் இடையூறுகள், நிம்மதியற்ற நிலை ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் சமாளித்திடக்கூடிய சக்தியும் உண்டாகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சிலருக்கு புதிய நட்பின் வழியே எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சிம்ம குருவின் பார்வைகளால் உயர்கல்வி, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.


கல்வி

நான்காமிட கேதுவால் கல்வியில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் போராடி அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். மருத்துவம், ஆராய்ச்சி மாணவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சிம்ம குருவின் சஞ்சாரமும் அவருடைய பார்வைகளும் படிப்பில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.


உடல்நிலை 

சுக ஸ்தானத்தில் கேது, விரய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் உடல் நிலையில் ஏதேனும் சங்கடங்கள் ஏற்படும். வாகனப் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். மனம் நிம்மதியை தேடும். மருத்துவச்செலவு அதிகரிக்கும் என்றாலும் ஆரோக்கியம் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.


குடும்பம் 

உறவினருடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வீடு நிலம் வாகனம் சொத்து என்ற எண்ணம் நிறைவேறும். மனதில் நிம்மதி இருக்கும். அமைதியான வாழ்க்கைக்கு வழிகாண்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். உயர்கல்வி திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.


பரிகாரம்: திருவாலங்காடு காளியை வழிபட சங்கடங்கள் விலகும். எடுத்த வேலை வெற்றியாகும்.


கார்த்திகை: முயற்சி வெற்றிதரும்


ஆத்ம காரகனான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு, ராகுவும் கேதுவும் பகைவர்கள் என்றாலும், கோச்சார ரீதியாக அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவர்கள். கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ராகு ஜீவன ஸ்தானத்திலும், 2,3,4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு சுக ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். 


இதனால், முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவால் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நினைப்பது நடந்தேறும். 2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்களும் சோர்வும் விலகும். ஆரோக்கியம் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். செய்து வரும் தொழிலில் முயற்சியும் ஆர்வமும் அதிகரிக்கும். 


கேது, கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு தாயாரின் உடல்நிலையில் சங்கடங்களையும், மருத்துவச் செலவுகளையும் ஏற்படுத்துவார். செய்துவரும் தொழிலில் எதிர்பாராத நெருக்கடியை உண்டாக்குவார். வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையில் கவனத்தை செலுத்த முடியாத நிலையினை உருவாக்குவார். 2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சகாய கேதுவாக முன்னேற்றங்களை ஏற்படுத்துவார். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை வழங்குவார். எடுக்கும் வேலைகளில் லாபத்தை உண்டாக்குவார்.


பொதுப்பலன்

கார்த்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் வாழ்க்கையை வளமாக்குவர். வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். குடும்பத்தில் சுபிட்சத்தை அதிகரிப்பர். எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவர். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய கேதுவால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். சனியும் லாப ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழில் உத்தியோகத்தின் முன்னேற்றம் ஏற்படும். முடங்கிக்கிடந்த தொழில்களும் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிதாக சொத்து சேரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும்.


தொழில்

கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு, ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், கார்த்திகை 2,3,4 ம் பாதத்தினருக்கு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், சகாய கேதுவும் தொடர்ந்து யோகப் பலன்களை வழங்குவர். செய்துவரும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவர். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை விலக்குவர். கையிருப்பை அதிகரிப்பர். ஏற்றுமதி இறக்குமதி, இண்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், ஜுவல்லரி, மேன் பவர் ஏஜன்சி, சினிமா, யூட்யூப், சின்னத்திரை தொழில்கள் வளர்ச்சி அடையும். லாபம் தரும்.


பணியாளர்கள்

பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், சங்கடங்கள் எல்லாம் விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு தகுதிக்குரிய பொறுப்பும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும்.


பெண்கள்

குடும்பம் மற்றும் வேலையில் இருந்த நெருக்கடிகள் முடிவிற்கு வரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய நிலை உண்டாகும். திருமணம், குழந்தை பாக்கியம், உயர்கல்வி, வேலை என்ற எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வேலையின் காரணமாக குடும்பத்தைப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணையக்கூடிய நிலை உருவாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.


கல்வி

குரு சஞ்சாரமும் பார்வைகளும் படிப்பில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உயர்கல்வி என்ற கனவை நனவாக்கும். சிலருக்கு மேற்கல்விக்காக வெளிநாடு செல்லக்கூடிய நிலை உருவாகும்.


உடல்நிலை

கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் வந்துபோகும் என்றாலும், அவை மருத்துவத்திற்கு கட்டுப்படும். 1,2,3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சகாய கேதுவால் உடல் நிலையில  ஏற்பட்ட சங்கடங்கள், பாதிப்புகள் விலகும். நோய்களிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.


குடும்பம்

குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் குழப்பங்கள் முடிவிற்கு வரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும். நிம்மதியான நிலை இருக்கும்.


பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டுவர நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !