திருத்தணி அம்மன் கோவில்களில் நாகசதுர்த்தி விழா கோலாகலம்
திருத்தணி: திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று நாகசதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு விரதம் முடிந்து ஐந்தாம் நாளில், நாகசதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை ஒட்டி, திருத்தணி நகரத்தில் உள்ள கங்கையம்மன் கோவில், நல்லதண்ணீர் குளக்கரையில் உள்ள நாகவள்ளி கோவில். அக்கய்யாநாயுடு சாலை தணிகாசலம்மன் கோவில், மடம் மற்றும் மேட்டுத் தெருவில் உள்ள படவேட்டம்மன் கோவில் உட்பட அனைத்து அம்மன் கோவில்களிலும், நேற்று நாகசதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதில், திரளான பெண்கள் பங்கேற்று, அங்குள்ள புற்றில் முட்டை, பால் ஊற்றி, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதே போல், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள தேசம்மன் கோவில், மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் உட்பட, திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், நாகசதுர்த்தி விழா விமரிசையாக நடந்தது. அத்திமாஞ்சேரிபேட்டை சுந்தரேசன் நகரில் உள்ள நாகாளம்மன் கோவிலிலும், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.