உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னி : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

கன்னி : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

உத்திரம்: நினைத்ததை சாதிப்பீர்கள்


உங்கள் நட்சத்திராதிபதியான சூரியனுக்கு, ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், அவர்கள் கோச்சார சஞ்சாரத்தின் போது சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிட வேண்டியவர்களாகிறார்கள். உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு சத்துரு ஜெய ஸ்தானத்திலும், 2,3,4 ம்  பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானமான 12 ம் இடத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானமான 11 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்.


உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகக்காரகன் ராகுவால் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். எடுக்கும் வேலையெல்லாம் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பம், தொழில், வேலை என்று அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை இருந்த எதிர்ப்பும் தடையும் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல் நிலை சீராகும். ஆரோக்கியம் மேம்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு பூர்வீக சொத்திலும் பிள்ளைகளாலும் பிரச்னைகள் ஏற்படும். தேவையற்ற சிந்தனைகள் மனதில் தோன்றி சங்கடத்திற்கு ஆளாக்கும். குடும்பத்திலும் குழப்பம் அதிகரிக்கும். உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, செலவை அதிகரிப்பார். தேவையற்ற அலைச்சலை உண்டாக்குவார். ஒரு பக்கம் வருமானம் வந்தாலும் மறு பக்கம் செலவை ஏற்படுத்துவார். உடல் நிலையிலும் ஏதேனும் பாதிப்பினை உருவாக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, வருமானத்தை அதிகரிப்பார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வராமல் இருந்த பணம் கைக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


பொதுப்பலன்

உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு யோகக்காரகன் ராகுவால் எதிர்வரும் ஒன்றரை ஆண்டுகள் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் நிம்மதியான நிலை இருக்கும். அசாத்தியமான துணிச்சல் உண்டாகும். இதுவரை இருந்த போராட்டநிலை இருந்த இடம் தெரியாமல் போகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது முன்னேற்றமான பலன்களை வழங்குவார். வருமானம் உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.  வாழ்வில் புதிய பாதை தெரியும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் முயற்சிகள் வெற்றிதரும்.


தொழில்

தொழில்காரகன் சனி பகவானின் சஞ்சார நிலை எதிர்மறையாக இருந்தாலும், 1 ம் பாதத்தினருக்கு ராகுவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு கேதுவும் சாதகமாக சஞ்சரிப்பதுடன், குருவின் பார்வைகளும் சாதகமாக இருப்பதால், செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகம், டிரேடிங், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ட்ரான்ஸ்போர்ட், வாகன விற்பனை, ஆடை ஆபரணம், பேன்சி ஸ்டோர், ஜுவல்லரி, அழகு சாதனம், சினிமா, தொலைக்காட்சி, யூடியூப், ஆன்லைன் வர்த்தகம், பதிப்பகம், கல்விக்கூடங்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலையில் நெருக்கடிகளை சந்தித்து வந்தவர்களுக்கு இக்காலத்தில் மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.


பெண்கள்

உடலிலும் மனதிலும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற அவரவர் கனவுகள் நனவாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவரின் ஆதரவு கிடைக்கும்.


கல்வி

இயல்பாகவே படிப்பில் அக்கறை கொண்ட உங்களுக்கு, இக்காலத்தில் படிப்பில் ஆர்வம் கூடும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம் வெளிநாடு என்றும் செல்வீர்கள்.


உடல்நிலை

உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு, ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு விரய ஸ்தானத்தை விட்டு கேது விலகுவதால் மருத்துவச் செலவுகள் குறையும். இதுவரை அச்சத்தை உண்டாக்கி வந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும்.


குடும்பம்

மகர ராகு, கடக கேதுவின் காலம் உங்களுக்கு யோகமான காலமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். வருமானம் திருப்பித்தரும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.


பரிகாரம்: அபிராமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


அஸ்தம்: லாப கேதுவால் யோகம்


கடந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகப்பலன்களை வழங்கிவந்த ராகு, நவ. 13 முதல் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான 5 ம் இடத்திலும், விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது, 11 ம் இடமான லாப ஸ்தானத்திலும் சஞ்சரித்து பலன்களை வழங்கிட உள்ளனர்.

5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, நேற்றிருந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னைகள் ஏற்படும். குழந்தை பாக்கியம் தாமதமாகும். அல்லது குழந்தை பிறப்பில் சிறு தடைகள் மருத்துவ உதவி தேவைப்படும். அதே நேரத்தில் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரம் தொழிலை முன்னேற்றம் செய்ய மாற்று வழி என்னவென்று கண்டறிவீர்கள். சிலருக்கு காதல் ஏற்படும். பங்குச்சந்தையில் எதிர்பாராத வரவு உண்டாகும். தேவையில்லாத கற்பனையும் குழப்பமும் ஏற்படும்.

லாப ஸ்தானமான 11 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது, இக்காலத்தில் உங்களுக்கு மிகப்பெரிய யோகப்பலன்களை வழங்குவார். உங்கள் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும், வரவேண்டிய பணமும் வரும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். கையில் பணம் புரளும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சுய அறிவால் முன்னேற்றம் ஏற்படும். மனதில் நம்பிக்கையும் தைரியமும் கூடும். வெளிநாட்டுப் பயணமும், வியாபார தொடர்பும் கிடைக்கும்.


பொதுப்பலன்

வாழ்க்கையில் ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்பதை இக்காலத்தில் உணர்வீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தொடர்ந்து உங்களுக்கு யோகப் பலன்களை வழங்குவார். முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகளை விலக்குவார். வியாபாரம் தொழிலில் வளர்ச்சியை உண்டாக்குவார். உடல்நிலையிலும் மனநிலையிலும் தெளிவினை ஏற்படுத்துவார்.


தொழில்

செய்துவரும் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். முடங்கிக்கிடந்த தொழிலும் முன்னேற்றம் அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். விவசாயம், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், டிரேடிங், ஒப்பந்தப்பணி, ட்ரான்ஸ்போர்ட், வாகன விற்பனை, ஸ்பேர் பார்ட்ஸ், கல்வி, நோட்டுப் புத்தகம் தயாரிப்பு, மினரல் வாட்டர், பப்ளிகேஷன், சின்னத்திரை, ரெடிமேட்ஸ் தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலையில் நிம்மதி இல்லை, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும். உங்கள் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும். திறமைக்கேற்ற பொறுப்பும் சலுகைகளும் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.


பெண்கள்

மனதில் அவ்வப்போது சிறு சிறு குழப்பம் உண்டானாலும், குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உயர்கல்வி, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். உறவினருடன  ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கணவரின் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சுய தொழில் செய்து வருவோருக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.


கல்வி

வித்யாகாரகன் அருள்பெற்ற உங்களுக்கு, படிப்பில் அக்கறை இருக்கும் என்றாலும், 5 ம் இட ராகுவால் அவ்வப்போது குழப்பத்திற்கு ஆளாவீர்கள், வேறு வேறு சிந்தனைக்கும் ஆட்படுவீர்கள் என்பதால், உங்கள் எதிர்கால நலனை மனதில் வைத்து படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியமாகும்.


உடல்நிலை

உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். பரம்பரை நோய், தொற்று நோய் என்று சங்கடத்திற்கு ஆளானாலும் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். மருத்துவச்செலவுகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும்.


குடும்பம்

குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். திட்டமிட்டு ஒவ்வொரு செயலிலும் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். இருப்பிடத்தை உங்கள் வசதிக்கேற்ப மாற்றம் செய்வீர்கள். நவீன உபகரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். சேமிப்பு உயரும். உறவினர் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.


பரிகாரம்: சந்திர மௌலீஸ்வரரை வழிபட மனம் தெளிவடையும். நன்மை உண்டாகும்.


சித்திரை: முயற்சி வெற்றிதரும்


உங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய்க்கு, ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிட வேண்டியவர்களாகின்றனர். நவ. 13 ல் நடைபெற இருக்கும் ராகு கேது பெயர்ச்சியில், சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ராகு பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு, மாதுர் மற்றும் சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.


இந்த சஞ்சார நிலையின் காரணமாக, 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் மனக்குழப்பம், தேவையற்ற பயம், குடும்பத்தில் சச்சரவு, அதனால் நிம்மதியற்ற நிலையும் உருவாகும். உறவினரால் சங்கடமும் எதிர்பார்ப்புகளில் இழுபறியும், எதிர்பாலினரால் பிரச்னைகளும், பிள்ளைகளால் அவமானத்தையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு, தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு, தாய் வழி உறவுகளால் சங்கடம், வேலைபளுவின் காரணமாக ஆரோக்கியத்தில் பின்னடைவு, தவறான நட்புகளால் அவமானம்,  கடன் தொல்லை, கையில் இருக்கும் பொருளை விற்று சமாளிக்க வேண்டிய நிலையும், வாகனத்தால் சங்கடம், வீடு வகையில் செலவும் ஏற்படும்.

இந்த நேரத்தில் 1,2 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, நன்மைகளை அதிகரிப்பார். எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். குடும்பம் தொழில், வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். செலவிற்குமேல் செலவாகி கையிருப்பு கரைந்தநிலை மாறி வரவிற்குமேல் வரவினை ஏற்படுத்தி சேமிப்பை உயர்த்துவார். இழந்த செல்வாக்கு அந்தஸ்தை மீண்டும் அடைய வைப்பார். உடலில் ஏற்பட்ட பாதிப்பை இல்லாமல் செய்வார். சொந்த வீடு வாகனம் என்ற நீண்டநாள் கனவை நனவாக்குவார். 3,4 ம் பாதத்தினருக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, தொழிலில் அக்கறையை அதிகரிப்பார். வியாபாரத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வைப்பார். வேலையில் இருப்பவர்களை நேர்மையாகவும் பொறுப்புடனும் செயல்பட வைப்பார். மேல் அதிகாரியின் ஆலோசனைக்கு மதிப்பளிக்க வேண்டிய நிலையை உண்டாக்குவார். புதிய முதலீடுகள் செய்பவர்களை யோசிக்க வைப்பார். 


பொதுப்பலன்

சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தான கேதுவும், 3,4 ம் பாதத்தினருக்கு சத்துரு ஜெய ஸ்தான சனியும், லாப குருவும் யோகத்தை உண்டாக்குவர். உத்தியோகம் தொழில் குடும்பத்தில் நிம்மதியான நிலையினை உருவாக்குவர். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.


தொழில்

செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். 1,2 ம் பாதத்தினருக்கு, லாப கேதுவும், 3,4 ம் பாதத்தினருக்கு தொழில்காரகன் சனியும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். லாபத்தை வழங்குவர். அரசுவழி முயற்சிகளும் வெற்றியாகும். காண்ட்ராக்ட், பைனான்ஸ், குடிநீர், குளிர்பானம், ஏற்றுமதி இறக்குமதி, ஜவுளி, ஜுவல்லரி, பேன்சி ஸ்டோர், ஷேர் மார்க்கெட், டிரான்ஸ்போர்ட், விவசாயம், உணவு பொருட்கள், மளிகை, கல்வி, பப்ளிகேஷன் துறைகள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உருவாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளும் நிர்வாகத்தின் ஆதரவும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு நீண்ட நாளாக முயற்சித்தும் கிடைக்காத இடமாற்றம் பதவி உயர்வு இக்காலத்தில் கிடைக்கும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும்.


பெண்கள்

குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி நிம்மதி உண்டாகும். கல்வி, வேலை, திருமணம் என்ற அவரவர் கனவுகள் நனவாகும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.


கல்வி

ஞானக்காரகன் குருவின் சஞ்சாரத்தினாலும் பார்வைகளாலும் படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆசிரியர் ஆலோசனைகளை ஏற்பீர்கள்.


உடல்நிலை

மனநிலையிலும் உடல் நிலையிலும் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். பெரியதாக பயமுறுத்திய நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். மருத்துவச்செலவுகள் குறையும். சிலருக்கு மாற்று மருத்துவம் கை கொடுக்கும்.


குடும்பம்

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உங்கள் வளர்ச்சியைக்கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். பொன் பொருள் சொத்து சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். சில புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.


பரிகாரம்: வள்ளி தெய்வானை சமேத முருகனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !