துலாம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028
சித்திரை: முயற்சி வெற்றிதரும்
உங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய்க்கு, ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்கிட வேண்டியவர்களாகின்றனர். நவ. 13 ல் நடைபெற இருக்கும் ராகு கேது பெயர்ச்சியில், சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ராகு பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு, மாதுர் மற்றும் சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். கேது சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.
இந்த சஞ்சார நிலையின் காரணமாக, 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் மனக்குழப்பம், தேவையற்ற பயம், குடும்பத்தில் சச்சரவு, அதனால் நிம்மதியற்ற நிலையும் உருவாகும். உறவினரால் சங்கடமும் எதிர்பார்ப்புகளில் இழுபறியும், எதிர்பாலினரால் பிரச்னைகளும், பிள்ளைகளால் அவமானத்தையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு, தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு, தாய் வழி உறவுகளால் சங்கடம், வேலைபளுவின் காரணமாக ஆரோக்கியத்தில் பின்னடைவு, தவறான நட்புகளால் அவமானம், கடன் தொல்லை, கையில் இருக்கும் பொருளை விற்று சமாளிக்க வேண்டிய நிலையும், வாகனத்தால் சங்கடம், வீடு வகையில் செலவும் ஏற்படும்.
இந்த நேரத்தில் 1,2 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, நன்மைகளை அதிகரிப்பார். எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். குடும்பம் தொழில், வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். செலவிற்குமேல் செலவாகி கையிருப்பு கரைந்தநிலை மாறி வரவிற்குமேல் வரவினை ஏற்படுத்தி சேமிப்பை உயர்த்துவார். இழந்த செல்வாக்கு அந்தஸ்தை மீண்டும் அடைய வைப்பார். உடலில் ஏற்பட்ட பாதிப்பை இல்லாமல் செய்வார். சொந்த வீடு வாகனம் என்ற நீண்டநாள் கனவை நனவாக்குவார். 3,4 ம் பாதத்தினருக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, தொழிலில் அக்கறையை அதிகரிப்பார். வியாபாரத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வைப்பார். வேலையில் இருப்பவர்களை நேர்மையாகவும் பொறுப்புடனும் செயல்பட வைப்பார். மேல் அதிகாரியின் ஆலோசனைக்கு மதிப்பளிக்க வேண்டிய நிலையை உண்டாக்குவார். புதிய முதலீடுகள் செய்பவர்களை யோசிக்க வைப்பார்.
பொதுப்பலன்
சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தான கேதுவும், 3,4 ம் பாதத்தினருக்கு சத்துரு ஜெய ஸ்தான சனியும், லாப குருவும் யோகத்தை உண்டாக்குவர். உத்தியோகம் தொழில் குடும்பத்தில் நிம்மதியான நிலையினை உருவாக்குவர். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
தொழில்
செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். 1,2 ம் பாதத்தினருக்கு, லாப கேதுவும், 3,4 ம் பாதத்தினருக்கு தொழில்காரகன் சனியும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். லாபத்தை வழங்குவர். அரசுவழி முயற்சிகளும் வெற்றியாகும். காண்ட்ராக்ட், பைனான்ஸ், குடிநீர், குளிர்பானம், ஏற்றுமதி இறக்குமதி, ஜவுளி, ஜுவல்லரி, பேன்சி ஸ்டோர், ஷேர் மார்க்கெட், டிரான்ஸ்போர்ட், விவசாயம், உணவு பொருட்கள், மளிகை, கல்வி, பப்ளிகேஷன் துறைகள் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்
வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உருவாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளும் நிர்வாகத்தின் ஆதரவும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு நீண்ட நாளாக முயற்சித்தும் கிடைக்காத இடமாற்றம் பதவி உயர்வு இக்காலத்தில் கிடைக்கும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும்.
பெண்கள்
குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி நிம்மதி உண்டாகும். கல்வி, வேலை, திருமணம் என்ற அவரவர் கனவுகள் நனவாகும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கல்வி
ஞானக்காரகன் குருவின் சஞ்சாரத்தினாலும் பார்வைகளாலும் படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆசிரியர் ஆலோசனைகளை ஏற்பீர்கள்.
உடல்நிலை
மனநிலையிலும் உடல் நிலையிலும் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். பெரியதாக பயமுறுத்திய நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். மருத்துவச்செலவுகள் குறையும். சிலருக்கு மாற்று மருத்துவம் கை கொடுக்கும்.
குடும்பம்
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உங்கள் வளர்ச்சியைக்கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். பொன் பொருள் சொத்து சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். சில புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
பரிகாரம்: வள்ளி தெய்வானை சமேத முருகனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சுவாதி: தொழில் வளர்ச்சி அடையும்
உழைப்பால் உயர்வடைந்துவரும் உங்களுக்கு, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு, மனதில் குழப்பத்தையும், சபலத்தையும், குடும்பத்தில் நெருக்கடிகளையும், பிள்ளைகளால் சங்கடங்களையும் ஏற்படுத்தி வந்தாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த கேது தேவைக்கேற்ற வரவை வழங்கிக் கொண்டிருந்தார். பெரியோருடைய தொடர்புகளை உண்டாக்கினார். நினைத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயர்ந்தது. இந்த நிலையில் நவ. 13 முதல் உங்கள் ராசிக்கு 4 ம் இடமான மாதுர் மற்றும் சுக ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகுவும், 10 ம் இடமான ஜீவன ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேதுவும் சஞ்சரிக்க உள்ளனர்.
கோச்சார ரீதியாக 4 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவார். தன் சந்தோஷம், தன் செல்வாக்கு, தன் புகழ் என்பதை நோக்கி உங்கள் பயணம் அதிகரிக்கும். புதிய நட்புகளும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உறவினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பும் மருத்துவச்செலவும் ஏற்படும். வீடு வாகனங்களின் வழியே சிலருக்கு திடீர் செலவு உண்டாகும். சிலர் சட்டத்திற்கும் சமூகத்திற்கும் புறம்பான செயல்களில் ஈடுபடுவீர்கள். கடன் தொல்லையும், எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் இழுபறியும், வியாபாரம், தொழிலில் கவனம் செலுத்த முடியாத நிலையும் சிலருக்கு உண்டாகும்.
ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது, செய்து வரும் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். நீங்கள் தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். வருமானத்தில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். வியாபாரம் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். ஒரு நேரம் நெருக்கடி ஏற்பட்டாலும் மறு நேரம் ஆதாயம் கிடைக்கும். சிலர் வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் வரும். 10 ம் இடம் என்பது பாக்கிய ஸ்தானத்திற்கு விரய ஸ்தானம் என்பதால் இந்த நேரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளில் இழுபறியும் ஏற்படும். தந்தைவழி உறவுகளால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். மற்ற இனம் மதத்தினராலும் அந்நியராலும் ஆதரவு உண்டாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
பொதுப்பலன்
ராகு கேது சஞ்சாரம் முயற்சிக்கேற்ற பலன்களை வழங்கினாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களுக்கு யோகப்பலன்களை வழங்குவர். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். செல்வம் செல்வாக்கு உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும்.
தொழில்
சகாய ஸ்தானத்திற்கு தொழில்காரகன் சனி பகவானின் பார்வை உண்டாவதால் செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். ஆதாயம் கூடும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ், மின்சாதனங்கள், கம்ப்யூட்டர், கட்டுமானப் பொருள், வாகனம், ஆட்டோமொபைல்ஸ், டூரிஸ்ட், டிராவல்ஸ், எக்ஸ்போர்ட், சினிமா, ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜென்சி, குடிநீர், நவீன சாதனங்கள், ஆயத்த ஆடை, பேன்சி தொழில்கள் லாபம் தரும்.
பணியாளர்கள்
திறமைக்கேற்ற வேலையில்லை, உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்று வருத்தப்பட்டு வந்தநிலை மாறும். உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் மதிப்புண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். பதவி உயர்விற்கு தடையாக இருந்த வழக்கு சாதகமாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு, வரவேண்டிய நிலுவைத்தொகை வரும்.
பெண்கள்
ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கணவரின் ஆதரவு கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும் என்றாலும், குடும்ப ரகசியங்களை அந்நியரிடம் பகிர்ந்து கொள்வதால் உங்களுக்கு அவப்பெயர் ஏற்படும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த ஆதாயம் வரும்.
கல்வி
படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தவறான நண்பர்களை விட்டு விலகுவீர்கள். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு மரியாதை உண்டாகும்.
உடல்நிலை
உழைப்பு, வேலை என்று ஓடிக்கொண்டே இருந்தாலும், ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார். உடலில் ஏற்படும் பாதிப்புகள், தொற்றுநோய், பரம்பரைநோய் எல்லாம் மருத்துவத்திற்கு கட்டுப்படும். ஆரோக்கியத்துடன் நடைபோடக்கூடிய நிலை உண்டாகும்.
குடும்பம்
தன்குடும்பம், தன்மக்கள் என்ற எண்ணத்துடன் வாழத்தொடங்குவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நீண்டநாள் கனவு நனவாகும். சொந்த இடம் வீடு வாகனம் என்ற முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் அமைதியான நிலை இருக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். பிறருடைய விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் உங்கள் வழியில் நடைபோடுவீர்கள்.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட்டுவர சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.
விசாகம்: உழைப்பால் உயர்வு
நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ற பலன்களை வழங்கி மனித வாழ்வில் மாற்றங்களை உண்டாக்கி வருபவர்கள். ஒன்றரை ஆண்டு காலம் ஒரு ராசிக்குள் சஞ்சரிக்கும் இவர்களுக்கு அஸ்தமனமோ, வக்கிர நிலையோ இல்லை என்பதால் இவர்களுடைய சஞ்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது.
நவ. 13. 2026 முதல் விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு 4 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, உழைப்பை அதிகரிப்பார். வேலையில் அக்கறை இல்லாதவர்களையும் அக்கறையுடன் செயல்பட வைப்பார். வருமானம் வசதி வாய்ப்பு என்ற நோக்கத்தை மனதில் உண்டாக்குவார். செய்துவரும் தொழிலில் ஆர்வத்தை அதிகரிப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றத்தை ஏற்படுத்துவார். வேலைத்தேடி வந்தவர்களுக்கு வாய்ப்பினை வழங்குவார். மனதில் புத்துணர்ச்சியும், வாழ்க்கையில் முன்னேற்றம் காணக்கூடிய நிலையும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் இக்காலத்தில் அதிகரிக்கும்.
4 ம் பாதத்தினருக்கு எடுத்த காரியங்கள் யாவையும் வெற்றியாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். செய்துவரும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார்.
இக்காலத்தில், விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு கேதுவின் 10 ம் இட சஞ்சாரம், வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த வரவிற்கு வழியமைக்கும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு இருந்து வந்த தடைகள் விலகும். பிற இனத்தினரால் மதத்தினரால் உதவிகள் கிடைக்கும். இருப்பிட வகையில் அனுகூலம் உண்டாகும். குறுக்கு வழியில் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். 4 ம் பாதத்தினருக்கு 9 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் செய்துவரும் தொழிலில் நிம்மதி உண்டாகும். பணியாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். எதிர்பாராத வகையில் உறவினர்களிடமிருந்து சிலருக்கு சொத்து பணம் போன்றவை கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் எதிர்பார்த்த பலன்களை தரும். தந்தையின் உடலில் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக மருத்துவச் செலவும் சிலருக்கு ஏற்படும்.
பொதுப்பலன்
மகரத்தில் ராகுவும், கடகத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில், கர்மக்காரகன் சனி பகவான் மீனத்தில் சஞ்சரிக்கிறார். ஞானக்காரகன் குரு சிம்மத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார் என்பதால் 1,2,3 ம் பாதத்தினருக்கு சங்கடங்கள் தோன்றும் நிலையிலும் அதில் மாற்றம் உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். 4 ம் பாதத்தினருக்கு எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய சொத்து சேரும். நீண்டநாள் கனவுகள் நனவாகும்.
தொழில்
செய்துவரும் தொழிலில் அக்கறை கூடும். முதலீட்டிற்கேற்ப ஆதாயம் உண்டாகும். பணியாளர்களும் இக்காலத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். கம்ப்யூட்டர், ஷேர் மார்க்கெட், ஜுவல்லரி, கமிஷன் ஏஜென்சி, பில்டர்ஸ், ரியல் எஸ்டேட், விவசாயம், பிரிக்ஸ், குடிநீர், ஆயத்த ஆடை, ஒப்பந்தத்தொழில், பேன்சி, எக்ஸ்போர்ட், தொழில்கள் வளர்ச்சி அடையும்.
பணியாளர்கள்
விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு வேலையில் அதிகபட்ச கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களையும் மேல் அதிகாரியையும் அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். இக்காலத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்படுவது அவசியம். தங்கள் அதிகாரத்தை வைத்து தவறு செய்பவர்கள் சங்கடத்திற்கு ஆளவர். 4 ம் பாதத்தினருக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு விருப்பப்பட்ட இடத்திற்கு மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும். எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும்.
பெண்கள்
குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவது இக்காலத்தில் நன்மையளிக்கும். சிலருக்கு உடல் நிலையில் சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாலினரிடம் கவனமாக இருப்பதால் உங்கள் பெயரும் கவுரவமும் நிலைக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் ஓரடி விலகி இருப்பது அவசியம். கணவரின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் மலைபோல் வரும் சங்கடமெல்லாம் பனிபோல் விலகும். இளம் பெண்களுக்கு கல்வி, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும்.
கல்வி
படிப்பின்மீது ஆர்வம் கூடும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். எதிர்வரும் தேர்வுகளில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
உடல்நிலை
1,2,3 ம் பாதத்தினருக்கு 6 ம் இட சனியும், லாப குருவும், 4 ம் பாதத்தினருக்கு சகாய ராகுவும், குருப்பார்வைகளும் உடல் நிலையைப் பாதுகாக்கும். இதுவரையில் மருத்துவமனை மருத்துவமனையாக சென்று வந்தவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச்செலவுகள் குறையும்.
குடும்பம்
குடும்பத்தில் போராட்டம் பிரச்னைகள் என்றிருந்த நிலை மாறும். எதிர்பார்த்த பணம் வரும். தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை ஏற்படும். வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கென்று செல்வாக்கும் மரியாதையும் உண்டாகும்.
பரிகாரம்: குல தெய்வத்தை வழிபட குடும்பத்தில் நன்மை உண்டாகும்.