உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

மீனம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 - 2028

பூரட்டாதி: கனவு நனவாகும்


நவ. 13. 2026 அன்று நடைபெற இருக்கும் ராகு கேது பெயர்ச்சியில், 1, 2, 3 ம் பாதத்தினருக்கு ராகு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், வாழ்க்கை வளமாகும். வீண் செலவுகள் கட்டுப்படும். நினைத்ததை சாதிக்க முடியும். தவறான வழியில் சென்றவர்களும் இனி சரியான வழியில் செல்லக்கூடிய நிலை உண்டாகும். நினைப்பது நடந்தேறும் என்றாலும், செலவுகள் பல மடங்கு அதிகரிக்கும். வீடு வாகனம் ஆடம்பரம் என்று பலவகையிலும் கையிருப்பு கரையும். கடனாக கொடுத்த பணம் திரும்ப வராமல் இழுபறியாக இருக்கும். உடல் நிலையிலும் அவ்வப்போது சிறு சிறு சங்கடங்கள் உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வரவேண்டிய பணம்வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 


இக்காலத்தில், ஞான மோட்சக்காரகன் கேது, 1, 2, 3 ம் பாதத்தினருக்கு 6 ம் இடமான, ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். பிரச்னைகள், போட்டிகள் விலகும். பிறரை நம்பி செயல்பட்டு வந்த நீங்கள் இனி சுயமாக செயல்படத் தொடங்குவீர்கள். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு, பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், உறவினருடன் மனக்கசப்பு, சொத்து விவகாரத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சோதனை, நெருக்கடி, சிலருக்கு எதிர் பாலினரின் நட்பு, சந்தோசம், அதனால் சமூகத்தில் அவமானம், மரியாதை இழப்பு உண்டாகும். சிலர் மன நிம்மதிக்காக கோயில் கோயிலாக சென்று வருவீர்கள்.


பொதுப்பலன்

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, 6 ம் இட கேதுவும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தான ராகுவும், இருவருக்கும், குருப் பார்வைகளும், 3, 6, 11ம் இட செவ்வாய் , 3, 6, 10, 11 ம் இட சூரியனின் சஞ்சாரங்களும் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். நினைத்த காரியங்களை நடத்தி வைக்கும். வருமானத்தை அதிகரிக்கும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்தை உயர்த்தும். வேலையில் முன்னேற்றத்தையும், தொழிலில் வருமானத்தையும் ஏற்படுத்தும். இதுவரை வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் இக்காலத்தில் இல்லாமல் போகும்.


தொழில்

மன உளைச்சலாலும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போனதாலும் இதுவரை எந்தவொரு வேலையிலும் முழுமையாக ஈடுபடாமல் இருந்த உங்களுக்கு, இக்காலத்தில் செய்துவரும் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வாகன உற்பத்தி. ஆட்டோ மொபைல்ஸ். எலக்ட்ரானிக்ஸ். கம்ப்யூட்டர். டிராவல்ஸ். ஆன்லைன் வர்த்தகம். விவசாயம் சார்ந்த பொருட்கள். ஜூவல்லரி. ரியல் எஸ்டேட். பில்டர்ஸ். ஷேர் மார்க்கெட் தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலையில் இருந்த போராட்டநிலை மாறும். உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் மதிப்புண்டாகும். சிலர் இருக்கும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு மாறுவீர்கள். எதிர்பார்த்த ஊதியமும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். கிடைக்க வேண்டிய சலுகைகளும் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும்.


பெண்கள்

மனதில் சஞ்சலமும் குழப்பமும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மையளிக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர வேண்டாம். வெளிவட்டாரத்தில் என்ன நடந்தாலும் அதை வாழ்க்கைத்துணையுடன் பகிர்ந்து கொண்டு முடிவிற்கு வருவது நன்மையளிக்கும். படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு காதலும் உண்டாகும். வேலையில்  இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.


கல்வி

படிப்பில் அக்கறை உண்டாகும். எதிர்வரும் பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்விக்காக சிலர் வெளிநாடும் செல்வீர்கள். குடும்பத்தினர் உங்களைப் பாராட்டுவர்.


உடல்நிலை

உடல்நிலையில் ஏதேனும் ஒரு சங்கடம் என்ற நிலையுடன் வாழ்ந்து வந்த உங்களுக்கு இக்காலத்தில் அதில் மாற்றம் ஏற்படும். மருத்துவச்செலவுகள் குறையும். ஆரோக்கியமாக நடை போடக்கூடிய நிலை உண்டாகும்.


குடும்பம்

வருமானம் அதிகரிப்பதுடன், செல்வாக்கும் உயரப் போவதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். புதிய இடம் வீடு வாகனம் என்ற நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.


பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மையும் மேன்மையும் உண்டாகும்.


உத்திரட்டாதி: நினைத்ததை சாதிப்பீர்கள்


நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, இதுவரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12 ம் வீட்டில் சஞ்சரித்த ராகு, 2026 நவ. 13 முதல், லாப ஸ்தானமான 11 ம் வீட்டிலும், இதுவரை சத்துரு ஜெய ஸ்தானமான 6 ம் வீட்டல் சஞ்சரித்த கேது, 5 ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.


லாப ஸ்தானமான 11 ம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகுவால், உடல் நிலையிலும் மன நிலையிலும் ஏற்பட்ட சங்கடங்கள் தொல்லைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உடலில் புதிய தெம்பு வந்ததுபோல் இருக்கும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். சரியான திட்டங்கள் தீட்டி அதைச்செயல்படுத்தவும் தொடங்குவீர்கள். உங்கள் முயற்சிக்கு சூழ்நிலைகளும் சாதகமாக இருக்கும். மற்றவர் உதவியும் கிடைக்கும். வேலையில்லாமல் சங்கடத்தோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை அமையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் புரிபவர்களுக்கு இது சிறப்பான காலமாக இருக்கும். கடன் பெற்று தொழிலை அபிவிருத்தி செய்யவும் வாய்ப்பு ஏற்படும். புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறப்பு உண்டாகும். கல்வி கற்போர் கல்வியில் சிறப்படைவர். வெளிநாட்டு முயற்சிகள் கூடிவரும். திருமண வயதினருக்கு திருமணம் நடைபெறும். ஆடை ஆபரணச் சேர்க்கையும் சமூகத்தில் அந்தஸ்தும் உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க வழிவகை ஏற்படும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக இக்காலம் இருக்கும்.


பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், மனதில் இனம்புரியாத குழப்பமும் சஞ்சலமும், அளவிற்கு மீறிய ஆசைகளும் ஏற்படும். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி சிலர் தவறானவர்களையும் நம்புவீர்கள். அவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதனால் குடும்பத்தில் குழப்பமும் வெளி வட்டாரத்தில் அவப்பெயரும் சிலருக்கு ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும்.  உறவுகளுடன் சண்டை சச்சரவும். பூர்வீக சொத்தில் பிரச்னைகளும் உண்டாகும். பிள்ளைகளால் சங்கடம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பிள்ளைகளுடன் இடைவெளியும் ஏற்படும். வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்லும் நிலையும். முயற்சிகளில் இழுபறியும் உண்டாகும். அக்கம் பக்கத்தினரால் சிற்சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.


பொதுப்பலன்

சனியின் ஆதிக்கத்தில் பிறந்து, கர்ம வினையே வாழ்க்கை என்பதை உணர்ந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு, ராகு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் யோகம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் வாழ்வை வளமாக்கும். செவ்வாய் 3, 6, 11 ம் இடங்களிலும் சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களிலும் சஞ்சரிக்கும் காலங்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.


தொழில்

லாப ஸ்தனமான 11 ம் இடத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால், செய்துவரும் தொழில் ஆதாயம்தரும். மூடி வைக்கப்பட்ட தொழில்களும் மீண்டும் திறந்து இயங்க ஆரம்பிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதியும் உதவியும் கிடைக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் தேடி வரும். பைனான்ஸ். ஜுவல்லரி. ஷேர் மார்க்கெட். எலக்ட்ரானிக்ஸ். கம்ப்யூட்டர். விவசாயம். இயந்திரத் தொழில். ஹார்டுவேர்ஸ். ஆட்டோ மொபைல்ஸ். பேக்டரி. ட்ராவல்ஸ். எக்ஸ்போர்ட். அச்சகம். ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். தனியார் நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் சலுகைகளும் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைப்பதுடன் எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் தேடிவரும்.


பெண்கள்

குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு நட்பின் வழியே சங்கடங்களும், வாழ்வில் தடுமாற்றமும் ஏற்படும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சுயதொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். பிள்ளைகளுடன் ஒரு இடைவெளி ஏற்படும்.


கல்வி

படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆசிரியர்கள் ஆலோசனை நன்மை தரும் என்றாலும், குழப்பத்திற்கு இடம் தராமல் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வது நன்மையாகும்.


உடல்நிலை

ஜென்ம ராசிக்குள் சனி பகவான் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனமாக இருப்பது அவசியம். பரம்பரை நோய், தொற்றுநோய், ரகசியநோய் என்று சிலருக்கு சங்கடத்தை அதிகரிக்கும்.  பெண்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். கவனக்குறைவால் சிலர் விபத்தையும் சந்திக்க நேரும் என்பதால் இக்காலத்தில் அனைத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.


குடும்பம்

வியாபாரம் தொழிலில் வருமானம் அதிகரிப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் கனவு நனவாகும் என்றாலும், தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும், பிள்ளைகள் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வதும் நன்மையளிக்கும்.


பரிகாரம்: கால பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும்.


ரேவதி: முயற்சி வெற்றிதரும்


எந்த ஒன்றிலும் நிதானமாகவும், எடுக்கும் வேலையில் திட்டமிட்டும் செயல்படக்கூடிய உங்களுக்கு, நவ. 13 முதல் ராகு 11 ம் இடமான லாப ஸ்தானத்திலும், கேது 5 ம் இடமான பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிக்க உள்ளனர். இதனால், இதுவரை ராகு கேது வழங்கி வந்த பலன்களில் மாற்றம் ஏற்படும்.


இதுவரை 6 ம் இடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு யோகப்பலன்களை கேது வழங்கிவந்த நிலையில், நவ. 13 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கிட உள்ளார். வருமானம் பல வழியிலும் இனி வர ஆரம்பிக்கும். தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும். வியாபாரம் தொழில் லாபம்தரும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். பெரியோரின் சந்திப்பும், தெய்வத் தலயாத்திரையும், மகான்களின் ஆசியும் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும். மனதில் உற்சாகம் இருக்கும். தேகத்தில் பொலிவு உண்டாகும். கேட்ட இடத்திலிருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். செய்துவரும் தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும் சொத்து சம்பந்தமான பிரச்னைகளில் சாதகமான நிலை ஏற்படும்.


இக்காலத்தில், 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் தெய்வ சிந்தனை அதிகரிக்கும். செய்துவரும் தொழிலில் எத்தகைய சங்கடங்கள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்திடக்கூடிய வலிமை உண்டாகும். இருக்கும் இடத்தை மாற்றி வேறு இடத்திற்குச் செல்லும் வகையில் சிலருக்கு சூழ்நிலை மாறும். அண்டை அயலார்களால் சிற்சில பிரச்னைகளை சந்திக்க நேரும். உறவினரிடையே பிரச்னை, மனக்கசப்பு என்று நீடித்துக் கொண்டே போகும் வீண் அலைச்சல், அதனால் சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாத, உறங்க முடியாத நிலை உருவாகும். பணச்செலவு அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் புதிய நட்பு ஏற்பட்டு அதன்காரணமாக சங்கடத்திற்கு ஆளாக வேண்டிவரும். பிள்ளைகள் வழியில் இக்காலத்தில் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இக்காலத்தில் அது நிறைவேறாமல் போகும். சிலருடைய மனைவிக்கு கருச்சிதைவு உண்டாகும்.


பொதுப்பலன்

ஜென்ம ராசிக்குள் உங்கள் லாபாதிபதி சனிபகவான் சஞ்சரிக்கும் நிலையில், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குருவின் சஞ்சார நிலைகளும், பார்வைகளும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். குடும்பம் தொழில் உத்தியோகத்தில் நிம்மதியான நிலையை உண்டாக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.


தொழில்

தொழில்காரகன் சனி பகவான் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும், லாப ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதும், இதுவரை தொழிலில் இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்யும். செய்துவரும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்கும். வருமானம் அதிகரிக்கும். ஷேர் மார்க்கெட். நிதி நிறுவனம். ஜுவல்லரி. எக்ஸ்போர்ட். கல்விக்கூடம். நோட்டுப் புத்தகங்கள். ஆன்லைன் வர்த்தகம். பதிப்பகம். பப்ளிகேஷன்ஸ். தொலைக்காட்சி. யூடியூப் தொழில்கள் வளர்ச்சி அடையும்.


பணியாளர்கள்

வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். சிலருக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புவரும். வெளிநாட்டில் வேலைப்பார்த்துவரும் சிலர் தாய்நாட்டை நோக்கி வருவீர்கள். இங்கும் தகுதியான வேலைக்கிடைக்கும். இக்காலத்தில் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நன்மையளிக்கும். இல்லையெனில் அதன் வழியாக பிரச்னைகள் தேடிவரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதிவு உயர்வு கிடைக்கும். செல்வாக்கு உயரும்.


பெண்கள்

ஜென்ம சனி, லாப ராகு, பூர்வ புண்ணிய கேது என்ற முக்கோண சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையில் நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தும். சுதந்திரமாகவும், தம் விருப்பப்படியும் சிலர் செயல்படத் தொடங்குவீர்கள் என்றாலும் அவற்றால் சங்கடங்களையும் பிரச்னைகளையுமே சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதை உணர்வீர்கள். இக்காலத்தில் குடும்பத்தினர் ஆலோசனையும் கணவரின் துணையும் உங்களைப் பாதுகாக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் எதிர்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையளிக்கும். திருமண வயதில் உள்ள சிலருக்கு காதலும், வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்பும் உருவாகும்.


கல்வி

வித்தியா காரகனின் அருள்பெற்ற உங்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும். படிப்புதான் வாழ்க்கை என்பதை உணர்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். 


உடல்நிலை 

நோய் நொடி மருந்து மாத்திரை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் பாரம்பரிய மருத்துவத்தால் குணமாகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். 


குடும்பம் 

லாப ராகுவும், குருப் பார்வைகளும் குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்தும். வசதி வாய்ப்புகளை அதிகரிக்கும். இதுவரை இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்யும். தம்பதிக்குள் ஒற்றுமையை உண்டாக்கும். வீடு வாகனம், பொன் பொருள் என்ற கனவுகளை நனவாக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்காக வாழக்கூடிய நிலை ஏற்படும்.


பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட வாழ்வில் இருந்த சங்கடம் நீங்கும். நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !