திருப்புல்லாணியில் மணவாள மாமுனிகள் அவதார தின விழா
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகளுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. கடந்த நவ., 11 துவங்கி இன்று வரை தொடர்ந்து மூன்று நாட்கள் விழா நடந்தது. வைணவ ஆச்சாரியார்களில் மிகவும் போற்றப்படுபவரும் ராமானுஜரின் மறு அவதாரமாக கருதப்படுபவருமான மணவாள மாமுனிகளின் ஜென்ம நட்சத்திரம் ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திரமாகும். இவர் கி.பி., 1370ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார். உடையவர் என்று போற்றப்படும் ராமானுஜரே மீண்டும் மணவாள மாமுனிகளாக அவதரித்து விசிஷ்டாத்வைத தத்துவத்தையும், நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பெருமையும் உலகிற்கு விளக்கினார். உபதேச ரத்தினமாலை திருவாய்மொழி, நூற்றந்தாதி, பிரபந்தம் உள்ளிட்ட உயரிய தமிழ் மற்றும் வடமொழி நூல்களை இயற்றியுள்ளார்.
இவரது அவதார தினத்தை முன்னிட்டு திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோயிலில் உற்ஸவர் மற்றும் மூலவருக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று ஒவ்வொரு திருச்சன்னதியின் முன்பாக மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.