கருவலூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள்
அவிநாசி: அவிநாசி அடுத்த கருவலூரில் புகழ்பெற்ற பழமையான கருவலூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறுகிறது.
அவிநாசி அடுத்த கருவலூரில் மிகப் பழமையான புகழ்பெற்ற கருவலூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வரும் டிசம்பர் 14ம் தேதி,அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் திருவோண நட்சத்திரம், விருச்சிக லக்னத்தில் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கோவிலில் மூலவர் விமானம்,ராஜகோபுரம், குறிஞ்சி விமானங்கள், அன்னதான மண்டபம், பக்தர்கள் ஓய்வு மண்டபம், திருமாளிகை பத்தி மண்டபம் மற்றும் பிரகார தளம் அமைத்தல் ஆகிய திருப்பணிகள், உபயதாரர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. கருவலூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன் கூறும்போது, அவிநாசி சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாது திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகவும் கேட்ட வரம் அருளும் கருவலூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக மராமத்து மற்றும் திருப்பணிகள் வேலை விரைவாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கோவிலில் உள்பிரகார மண்டபம்,மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் 20 கல் திருமாளிகை பத்தி மண்டபம், ராஜகோபுரத்தில் உள்ள சிலைகளுக்கு வர்ணம் தீட்டுதல், மூலவர் சன்னதி கோபுரம்,கொடிமரம், தீபஸ்தம்பம் ஆகியவற்றை மராமத்துப் பணிகள் செய்து வர்ணம் தீட்டுதல்,தரைத்தளம் அமைத்தல் மற்றும் உற்சவர் மண்டபம் புதுப்பித்தல் ஆகிய பணிகள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீரும் சிறப்புமாக ஹிந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில், பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், தமிழ்செல்வன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைமையில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கருவலூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஸ்தானீகர் சிவஸ்ரீ நாச்சிமுத்து சிவம் தலைமையில் கும்பாபிஷேக சர்வ சாதகம் நடைபெறுகிறது.