பழநி சூரசம்ஹாரத்துக்கு தயாராகும் சூரன் பொம்மைகள்
பழநி: பழநி கோயில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு நான்கு சூரன்கள் தயார் செய்யப்படுகிறது.
பழநி கோயில் கந்த சஷ்டி விழா நவ., 10 முதல் நடைபெற்று வருகிறது. நாளை (நவ.15) முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது. பழநியில் கிரிவீதிகளில், முறையே தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் என நான்கு சூரன்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். அதற்கான சூரன் உருவ பொம்மைகள், பெரியநாயகி அம்மன் கோயிலில் பரம்பரையாக செய்து வரும் நபர்கள் மூலம் செய்யப்பட்டு வருகிறது. சூரன்களுக்கு உடைய ஆயுதங்கள், கம்பீர உடல் அமைப்பு ஆகியவை வண்ண வண்ண காயிதங்கள் மூலம் அலங்கரித்து தயார் செய்கின்றனர். மேலும் சூரர்களின் தலைகளை பிரத்தியேகமாக தயார் செய்து, இன்று சிறப்பு பூஜைகள் செய்து எடுத்து வந்து சூரர்களின் உடல்களுடன் பொருத்த உள்ளனர். சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க தயாராக உள்ள சூரன் உருவ பொம்மைகளை நாளை காலை கிரிவீதிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லபட உள்ளது.