முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: வடபழனி, மயிலாப்பூர், குன்றத்துார் உள்ளிட்ட முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை வடபழனி முருகப்பெருமான் கோவிலில், கந்தசஷ்டி விழா கடந்த 9ம் தேதி வரசித்தி விநாயகர் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து, 10ம் தேதி மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை தொடங்கியது. நேற்று, மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடந்தது.
இன்று காலை 6:00 மணிக்கு தொடங்கிய லட்சார்ச்சனை, உச்சிகால பூஜையுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவமும், இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரமும் நடைபெறுகின்றன.
பக்தர்கள் காண்பதற்காக நான்கு இடங்களில், ‘எல்.இ.டி.,’ திரைகள் அமைக்கப்பட்டு, நேரடி வர்ணனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமான் மயில் வாகனத்தில் வீதி உலா வருகிறார். நாளை இரவு திருக்கல்யாணமும், தொடர்ந்து திருமண விருந்தும் நடைபெற உள்ளன.
கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. தினமும் சிங்காரவேலர் வீதி உலா நடைபெற்றது. இன்று இரவு சூரசம்ஹாரமும், நாளை ஏகதின லட்சார்ச்சனை, திருக்கல்யாணமும் நடக்கின்றன.
குன்றத்துார்
குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று மாலை 4:00 மணிக்கு மலை அடிவாரத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சூரனை வதம் செய்ய, நகைமுகவல்லி அம்பாளிடம், முருகன் ‘சக்தி வேல்’ பெறும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
சூரசம்ஹாரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், மருத்துவ முகாம்கள், தற்காலிக கழிப்பறைகள், சிறப்பு பேருந்துகள், ‘எல்.இ.டி.,’ திரைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் செந்தாமரைக் கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் ஆகியோர் செய்துள்ளனர்.