உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை கோவில்களில் துலா உற்சவத்தையொட்டி திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை கோவில்களில் துலா உற்சவத்தையொட்டி திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்கள் துலா உற்சவம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் சுவாமி கோவில், ஐயாரப்பர் கோவில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த மாதம் 18ஆம் தேதி துலா மாதப்பிறப்பு தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. கடைசி 10 நாள் விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய விழாவான திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் அனைத்து கோவில்களிலும் நடந்தது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோவில் திருக்கல்யாணம் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வர மாலை மாற்று உற்சவத்துடன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், சிவபுரம் வேதசிவ ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார், கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். இதுபோல தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் கோவிலில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் அன்பே சிவம் அறக்கட்டளை தலைவர் பாலச்சந்திரன் சிவாச்சாரியார், கோவில் கண்காணிப்பாளர் அகோரம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மார்க்கெட் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோவில், தெப்பக்குளம் விஸ்வநாதர் கோவில், ஐயாரப்பர் சுவாமி கோவில்களில் துலா உற்சவத்தை ஒட்டி நேற்று முன் தினம் இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !