பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்: குவிந்த பக்தர்கள்
பழநி: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க வந்த பக்தர்கள் போக்குவரத்து நெரிசலால் சிரமம் அடைந்தனர்.
பழநி முருகன் கோயிலில் நவ.,10 முதல் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது இன்று மாலை கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடந்தது. இந்நிலையில் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் திருஆவினன்குடி, பழநிமுருகன் கோயில் ஆகியவற்றில் வாழைத்தண்டு, பழங்கள், காய்கறிகள் படையல் வைத்து வழிபட்டனர். திருஆவினன்குடி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நெரிசலில் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். இதனால் அய்யம்புள்ளி ரோடு, அருள்ஜோதி வீதி, குளத்து ரோடு பகுதிகளில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி சென்றனர். மேலும் அதிக அளவில் பக்தர்கள் வருகை இருந்ததால் நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்கென சிறப்பு பஸ்கள் பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்பட்டது. கிரிவீதியில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கிரிவிதியில் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனைகள் நடந்தது. இன்று பழநி முருகன் கோயில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற உள்ளது.