உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கழுகுமலையில் தாரகாசுரன் சம்ஹாரம்

கழுகுமலையில் தாரகாசுரன் சம்ஹாரம்

துாத்துக்குடி: தென்பழனி என அழைக்கப்படும் கழுகுமலையில் நடந்த சம்ஹார நிகழ்ச்சியில், தாரகாசுரனை கழுகாசல மூர்த்தி வதம் செய்தார்.

துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் அமைந்துள்ள தென் பழனி என அழைக்கப்படும் கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 10 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

ஐந்தாம் நாளான நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு, கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை அம்பாள்களை எழுந்தருளச் செய்யும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார்.

இதையடுத்து, சூரர்களால் சிறைபிடிக்கப்பட்ட வீரபாகுவை மீட்பதற்காக, சுவாமி வீரவேல் ஏந்தி மயில் வாகனத்தில் போர்க்களத்தை அடைந்தார்.

அங்கு கோவில் சார்பில் நாரதர், முருகாற்றுப்படைப் பாடல்களைப் பாடியபடி சூரபத்மனிடம் மூன்று முறை துாது சென்றார். சமரசம் ஏற்படாததைத் தொடர்ந்து, தாரகாசுரனை கழுகாசலமூர்த்தி வதம் செய்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் “வெற்றி வேல்! வீர வேல்!” என பக்தி முழக்கமிட்டனர். முருகன் கோவில்களில் சஷ்டியின் 6 வது நாளில்தான் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம்.

முந்தைய நாளே தாரகாசுரன் வதம் செய்யும் நிகழ்ச்சி கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருத்தலத்தில் நடைபெறுவது தனிச்சிறப்பு ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !