உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம்: நாளை திருக்கல்யாணம்

முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம்: நாளை திருக்கல்யாணம்

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது.

பரமக்குடி வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா நவ., 10 இரவு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளிய நிலையில் தீபாராதனைகள் நடந்தன. நேற்று இரவு முருகனுக்கு சக்திவேல் வழங்கும் நிகழ்வு நடந்தது. இன்று மாலை 5:00 மணிக்கு மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா வந்து கோயில் முன்பு வைகை ஆற்றின் கரையில் சூரசம்ஹார லீலை நடக்கிறது.

நாளை காலை 9:30 முதல் 10.30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதே போல் பாரதிநகர் முருகன் கோயில் மற்றும் பால்பண்ணை அருகில் உள்ள முருகன் கோயில்களிடம் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது.

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு வேல் வாங்குதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமரப்பா சன்னதியில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது.

அன்று முதல் தினமும் காலை சுவாமிக்கு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்று வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8:00 மணிக்கு தீபாராதனை, இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உற்சவம், 17ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி, வேல் வாங்குதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

முத்தியால்பேட்டையில் சுந்தர விநாயகர், வள்ளி, தெய்வானை சுப்ரமணிய சுவாமி, சித்தி விநாயகர் கோவிலில், 165ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 10ம் தேதி துவங்கியது.

தினமும் காலை சிறப்பு அபிஷேகம், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிவுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை சிங்க முகா சூரன் புறப்பாடு, கழுமரம் நடும் நிகழ்ச்சி, இரவு வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்று (15ம் தேதி) மதியம் 2:30 மணிக்கு தாரகா சூரன் புறப்பட்டு, இரவு 7:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. நாளை 16ம் தேதி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 20ம் தேதி மாலை 5:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

வில்லியனுார்: வில்லியனுார் பிரசித்திபெற்ற சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று மாலை சூரசம்ஹார விழா நடக்கிறது.

வில்லியனுார் சுந்தரமூர்த்தி வினாயகபுரம் மேற்கே உள்ள வள்ளிதேவ சேனா சிவசுப்ரமணிய கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் கடந்த 10ம் தேதி துவங்கியது. தொடர்ந்து விழாவில் மாலை 6:00 மணிக்கு மேல் சிறப்பு அபிேஷகம், அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஆலயம் வலம் வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

முக்கிய விழாவாக இன்று சூரசம்ஹார விழா நடக்கிறது. காலை 7:00 மணி முதல் 36 முறை கந்த சஸ்டி பாராயணம் நடைபெறுகிறது.

காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணியளவில் சூரசம்ஹார விழா நடக்கிறது. நாளை காலை 10:00 மணியளவில் சிறப்பு அபிேஷகம், இரவு 7:00 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் உற்சவதார்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !